வில்லியம்ஸ்பர்க், வர்ஜீனியா: வர்ஜீனியாவிலுள்ள நெடுஞ்சாலையில் 60க்கும் மேலான வாகனங்கள் ஒன்றன்மீது ஒன்று மோதிய விபத்தில் பலர் காயமடைந்ததாக மாநிலப் போலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணிக்கு முன்பாக வில்லியம்ஸ்பர்க் நகருக்கு அருகே நடந்ததாக போலிஸ் சார்ஜன்ட் மிஷல் அனயா தெரிவித்தார்.
விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி, சாலையின் எல்லா தடங்களையும் மீண்டும் போக்குவரத்துக்குத் திறந்து விடுவதற்குப் பல மணிநேரம் எடுத்தது.

விபத்துக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், மூடுபனியும் பனிபடர்ந்த சாலையும் காரணங்களாக இருந்திருக்கும் என்றார் திருவாட்டி அனயா. மொத்தம் 69 வாகனங்கள் விபத்தில் சிக்கியதோடு, 51 பேருக்கு நான்கு உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் எத்தனை பேர் கடுமையாகக் காயமடைந்தனர் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
விபத்துக்கான காரணத்தை அறிய போலிசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே, இந்த விபத்து நடந்த சாலையின் எதிர்த்திசையில் மற்றொரு சம்பவத்தில் எட்டு வாகனங்கள் விபத்தில் சிக்கியமாகத் திருவாட்டி அனயா தெரிவித்தார்.