கொழும்பு: தூதரக அலுவலகங்களின் பாதுகாப்புக்கு அந்தந்த நாடுகளே பொறுப்பு என்று இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகம் தெரிவித்து உள்ளது. கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக ஊழியர் கைது விவகாரம் தொடர்பில் இரு நாடுகளின் உறவில் இடையூறு ஏற்பட்டு உள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
இச்சம்பவம் ஏற்படுத்திய தவறான புரிந்துணர்வால் இலங்கை அரசாங்கத்துடனான உறவில் குந்தகம் ஏற்பட்டுள்ளதை சுவிஸ் தூதரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் காண முடிந்தது. இருப்பினும் கசப்பு நீங்கி சாதகமான சூழ்நிலை விரைவில் ஏற்படும் என்று அத்தூதரகம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய கார்னியர் பேனிஸ்டர் ஃபிரான்சிஸ் என்னும் உள்ளூர் பெண் ஊழியர் நவம்பர் மாத இறுதிவாக்கில் புகார் ஒன்றைத் தெரிவித்திருந்தார். தம்மை சிலர் கடத்திச் சென்று துன்புறுத்துவதாகவும் தூதரக ரகசியங்களைக் கேட்டு தம்மை பாலியல் வதை செய்வதாகவும் அவர் அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார். விசாரணையில் இறங்கிய போலிஸ், அப்பெண் தெரிவித்த புகார் பொய் என கண்டுபிடித்தது. புகாருக்கு உடந்தையாக அவர் பொய்யான ஆதாரங்களைத் திரட்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.