ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் இந்த வார இறுதியில் வீசவிருக்கும் அனல்காற்று, காட்டுத் தீ நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும் என்ற எச்சரிக்கையுடன் கரையோரத்திலிருந்து வெளியேறும்படி ஆயிரக்கணக்கான சுற்றுப்பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுமுறைக்காக சுற்றுப்பயணிகள் விரும்பிச் செல்லும் பிரபல ‘பேட்மேன்ஸ் பே’ பகுதியில் தொடங்கி அருகில் உள்ள விக்டோரியா மாநிலம் வரை உள்ள கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் சுற்றுப்பகுதியை சுற்றுப்பயணிகள் தவிர்த்துவிடுமாறு தீயணைப்புச் சேவை எச்சரித்துள்ளது.
வெப்பநிலை 40 டிகிரிஸ் செல்சியசுக்கு மேல் போகக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
இதைத் தொடர்ந்து பெட்ரோல் நிலையங்கள், பேரங்காடிகள் ஆகியவற்றில், வாகனங்கள் நீண்ட வரிசை பிடித்து மெதுமெதுவாக நகர்ந்து செல்கின்றன. மூடப்பட்ட பிரதான சாலைகள் மறுபடியும் திறக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் ஆக மோசமான புதர்த் தீ சம்பவமாகக் கருதப்படும் இதில் இதுவரை குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் விக்டோரியா மாநிலத்தில் 17 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே பல்லாயிரக் கிலோமீட்டர் தொலைவிலுள்ள நியூசிலாந்து பனிப் பாறைகளின், காட்டுத் தீயின் புகையால் பழுப்பு நிறமாக மாறியுள்ளதை சமூக ஊடகங்களில் வெளியான படங்கள் காட்டின.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity