உலகின் ஆக குள்ளமான மனிதர் மரணம்

உலகின் ஆக குள்ளமான மனிதர் என்ற பெருமையைப் பெற்ற ககேந்திர தாபா மகர் நேற்று நேப்பாளத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 27. அவரது உயரம் ஒரு மீட்டர்கூட இல்லை. வெறும் 67.08 செ.மீட்டர்தான்.

காட்மாண்டுவிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் அவரது பெற்றோர் வசிக்கும் பொக்காராவில் உள்ள மருத்துவமனையில் அவர் காலமானார்.

குடும்பத்தார் நடத்திவந்த கடையில் தனது பெரும்பாலான பொழுதை மகிழ்ச்சியுடன் கழித்து வந்தார் ககேந்திரா.

“நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இம்முறை அவரது இதயம் பலவீனமாகி இறந்துவிட்டார்,” என்று அவரது சகோதரர் மகேஷ் தாபா மகர் சொன்னார்.

கடந்த 2010ஆம் ஆண்டில் உலகின் ஆகக் குள்ளமான மனிதராக ககேந்திர தாபா மகரை கின்னஸ் நிறுவனம் பிரகடனப்படுத்தியது. அப்போது அவருக்கு வயது 18.

இருந்தாலும் நேப்பாளத்தில் 54.6 செ.மீட்டர் உயரம் கொண்ட சந்திரா பஹதூர் டாங்கி என்பவர் அவரைவிட குள்ளமானவர் என அடையாளம் காணப்பட்டதால் ககேந்தி ராவுக்கு வழங்கப்பட்ட பட்டம் பறிபோனது. ஆனால் 2015ல் டாங்கி இறந்துவிட்டதால் ‘உலகின் குள்ள மானவர்’ என்ற பட்டம்  அவருக்கு மீண்டும் கிடைத்தது.

“ககேந்திரா தாபா பிறக்கும்போது உள்ளங்கையில் பிடிக்கும் அளவுக்கு அவர் குட்டியாக இருந்தார்,” என்று அவரது தந்தை ரூப் பஹதூர் கின்னஸ் சாதனைப் புத்தகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

பன்னிரண்டு நாடுகளுக்கு மேல் பயணம் செய்துள்ள ககேந்திர தாபா மகர், ஐரோப்பா, அமெரிக்கா உட்பட பல நாடுகளின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளார்.

அவரது மரணம் துயரத்தை அளிக்கிறது என்று கின்னஸ் அமைப்பு கூறியுள்ளது.

#தமிழ்முரசு #ககேந்திரா தபா மகர் #KhagendraThapaMagar #Guiness