உலக அளவில் 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிப்பு; ஒரே நாளில் 106,000 பேருக்கு கிருமித்தொற்று

கொரோனா கிருமி தொற்றியவர்கள் எண்ணிக்கை, 5 மில்லியனை தாண்டிவிட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 106,000 பேருக்கு புதிதாக கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.

கிருமித்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, செவ்வாய்க்கிழமை முதல் புதன்கிழமை வரை ஏற்பட்ட எண்ணிக்கை அதிகரிப்புதான் கொரோனா கிருமித் தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை அதிகரிப்பாகும்.

உலக நாடுகள் கிருமித்தொற்று சோதனைகளை அதிகரித்த பின்னர் இந்த புதிய புள்ளிவிவரங்கள் பதிவாகியுள்ளன.

பல பணக்கார நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கியுள்ள நிலையில், ஏழை நாடுகளில் புதிய தொற்று சம்பவங்கள் அதிகரிப்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

“நாம் இன்னும் நீண்டதூரம் போக வேண்டியுள்ளது. குறைந்த, நடுத்தர வருவாயுள்ள நாடுகளில் கிருமித்தொற்று அதிகரிப்பது கவலைக்குரியது,” என்றார் உலக சுகாதார நிறுவனம் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸ் என்று கூறினார்.

கிருமித்தொற்றால் உலக அளவில் இதுவரை ஐந்து மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் மூலம் தெரியவருகின்றன.

இதில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் அமெரிக்க நாட்டவர்கள். அங்கு 94,941 பேர் கிருமித்தொற்றால் உயிரிழந்தனர். உலகளவில் மொத்தம் 329,761 பேர் மாண்டனர். கிருமி தொற்றியோரில் 1.9 மில்லியன் பேர் குணமடைந்தனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கிருமிப் பரவலை சரிவரக் கையாளவில்லை என்றும் தொற்று தொடங்கிய சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனத்தை கடுமையாகச் சாடி வருகிறார்.

உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடுகளில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வராவிட்டால் அந்த நிறுவனத்திலிருந்து விலகப் போவதாகவும் அதற்கான நிதியுதவியை நிரந்தரமாக நிறுத்தப் போவதாகவும் இந்த வாரம் அவர் எச்சரித்திருந்தார். சீனத் தலையீடு எதுவும் இல்லாமல் சுதந்திரமாக செயல்படுவதை உறுதிசெய்தால் மட்டுமே அந்த நிறுவனத்துடன் தொடர்ந்து இயங்க முடியும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா பிரச்சினையை அமெரிக்க சரியாகக் கையாளவில்லை என்றும் அதை திசைதிருப்பவே உலக சுகாதார நிறுவனம் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதாகவும் சீன வெளியுறவுத்துறை விமர்சித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில், உலகளவில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தில் அதிகளவிலான கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ள நாடாக பிரேசில் உள்ளது. புதன்கிழமை நிலவரப்படி, அங்கு கிருமி தொற்றியோர் எண்ணிக்கை 291,579 ஆகியுள்ளது.

சீனாவில் தொடங்கிய கிருமித்தொற்று, ஐரோப்பாவிலும் பின்னர் அமெரிக்காவிலும் அதிகரித்தது. கொரோனா தொற்று பரவலால் உலகில் பல நாடுகளின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.