அமெரிக்கா: ஒரே நாளில் 50,000 பேருக்கு தொற்று

வாஷிங்டன்: அமெரிக்காவில் இதுவரை இல்லாத ஆக அதிக அளவாக ஒரே நாளில் 50,000 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜூன் மாத தொடக்கத்தில் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 22,000 பேர் பாதிக்கப்பட்டனர்.

ஆனால், ஒரு மாதத்திற்குள் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி, ஜூலை 1ஆம் தேதியன்று 52,609 பேர் பாதிக்கப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அன்றாட எண்ணிக்கையில் பாதியளவு அரிசோனா, கலிஃபோர்னியா, ஃபுளோரிடா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களோடு தொடர்புடையவை.

இந்த மாநிலங்கள் அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 30 விழுக்காட்டைக் கொண்டுள்ளன.

இதற்கிடையே தொற்று தீவிரம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தேசிய அளவில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர்களில் 7 விழுக்காட்டினருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக ராய்ட்டர்ஸ் ஆய்வு கூறுகிறது.

இந்நிலையில், வேகமாகப் பரவி வரும் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த தேசிய அளவில் அழுத்தம் கொடுக்கப்படாவிட்டால், கிருமித்தொற்றுக்கு ஆளாவோரின் அன்றாட எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டுவதற்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்க செனட் குழுவிடம் தேசிய ஒவ்வாமை, தொற்றுநோய்கள் அமைப்பின் தலைவர் டாக்டர் அந்தோனி ஃபவுசி தெரிவித்தார்.

“தொற்று அதிகமாக உள்ள இடங்களில் மட்டும் கவனம் செலுத்தினால், அது நாடு முழுவதையும் ஆபத்தில் சிக்க வைக்கும்,” என்றும் அவர் சொன்னார்.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது மட்டுமே காரணம் அல்ல என்று கூறப்படுகிறது.

மே மாத இறுதியில் அங்கு நடந்த நினைவு நாள் கொண்டாட்டங்களின் போது மக்கள் ஒன்று கூடியதும் இந்த எண்ணிக்கை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இவ்வார இறுதியில் சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது அமெரிக்கர்கள் அதிகமாக கடற்கரையில் கூட வாய்ப்புள்ளது என்பதால் சுகாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.