விக்டோரியாவில் மேலும் 430 பேருக்கு கிருமித்தொற்று

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம், கிருமிப் பரவலைத் தடுத்து நிறுத்த கடுமையாகப் போராடி வருகிறது.

அம்மாநிலத்தில் உள்ள மெல்பர்ன் நகரமும் முடக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா கிருமித்தொற்று அடங்குவதாக இல்லை.

மாநிலம் முழுவதும் 2வது அலையாக கிருமித்தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் அங்கு புதிதாக 403 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதற்கு முந்தைய நாளிலும் புதிய உச்சமாக 484 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது.

இந்த நிலையில் கிருமித்தொற்றுக்கு மேலும் ஐவர் பலியாகினர் என்று மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ருஸ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். விக்டோரியா மாநிலத்தில் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவுவதால் நாட்டின் 2வது பெரிய நகரமான மெல்பர்ன் ஆறு வாரத்துக்கு முடக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே உடல்நலமில்லாதவர்கள் தங்களை பரிசோதித்து தனிமைப் படுத்திக் கொள்வதை ஊக்கமூட்டும் வகையில் 300 ஆஸ்திரேலிய டாலர் வழங்கும் திட்டத்தை திரு ஆண்ட்ருஸ் அறிவித்துள்ளார்.