இலங்கையில் 5ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல்; வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகமான செலவு

ஆகஸ்ட் 5ஆம் தேதி இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் 10 பில்லியன் ரூபாய் செலவில் நடைபெற இருப்பதாகவும் அந்நாட்டில் இதுவரை தேர்தலுக்குச் செலவிடப்பட்ட தொகைகளில் இது ஆக அதிகம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

16 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.

கொவிட்-19 நெருக்கடி காலத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்ய தேர்தல் ஆணையம் மிகுந்த சிரமத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

கொவிட்-19ஐ முன்னிட்டு, தேர்தலுக்காக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கூடுதலாக செலவாகி இருப்பதாக தேர்தல் தலைமை அதிகாரி மஹிந்த தேசபிரியா உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்தார்.

தேர்தல் நடைமுறைகளுக்காக கூடுதல் ஆட்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதுடன் முகக்கவசங்கள், கிருமிநாசினிகள் போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் 2ஆம் தேதி அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடாளுமன்றத்தைக் கலைத்து ஏப்ரல் 25ஆம் தேதி திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்.

ஆனால், கொரோனா தொற்று காரணமாக தேர்தலை ஜூன் 20க்கு தள்ளி வைத்தது தேர்தல் ஆணையம். கொவிட்-19 பரவல் தணியாததால், தேர்தல் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.

இலங்கையில் இதுவரை 2,815 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்தனர்.