விக்டோரியாவில் கட்டுக்கடங்காத கிருமிப் பரவல்; தேசிய பேரிடர் நிலை அறிவிப்பு

 கட்டுக்கடங்காத கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் தேசியப் பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதோடு மெல்பர்ன் நகரில் இரவு  நேர ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

விக்டோரியாவில் இன்று ஆக அதிகமாக 671 கிருமித்தொற்று பாதிப்புகளும் ஏழு மரணங்களும் பதிவாகின.

ஏற்கெனவே ஆறு வார முடக்க உத்தரவு நடப்பில் இருந்தாலும் சமூக பரவலும், கிருமித்தொற்று எப்படி பரவியது என்பதைக் கண்டறிய முடியாத சம்பவங்களும் விக்டோரியாவில் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

எனவே கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கும் விதமாக அடுத்த ஆறு வாரங்களுக்கு இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

இன்று இரவு முதல் ஒவ்வொரு நாளும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும்.

வேலைக்குச் செல்வது மற்றும் அத்தியாவசிய தேவைகள் தவிர மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்​கூடாது.

புதன் கிழமை முதல் அனைத்து பள்ளிகளும் இணையம் வழி கற்பித்தலைக் கடைப்பிடிக்கத் தொடங்கும்.