மலேசியாவில் பிறந்த அனைத்துலக முன்னாள் பூப்பந்து விளையாட்டாளரும் பயிற்றுவிப்பாளருமான பென்னி காவ், 85, கொரோனா தொற்றால் லண்டனில் உள்ள கிங்ஸ்டன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அவரது மரணத்துக்கு 9 நாட்களுக்கு முன்புதான் அவரது 25 வயது தோழியான ஜூலியா காக்ஸ், 66, என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில்தான் அவரது திருமணமும் நடைபெற்றது.
ஜூலியா காக்சின் மகள்களான எலேனார் காக்ஸ், 34, எம்மா பெர்ஹாம், 38 ஆகியோரின் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றது.
பினாங்கில் பிறந்த பென்னி எனப்படும் கா பெங் இயம், ஒரு முறை தாமஸ் கோப்பைப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்தார்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக 1962ஆம் ஆண்டில் அவர் இங்கிலாந்துக்குச் சென்றார்.
இவ்வாண்டு ஜனவரி 2ஆம் தேதி கிங்ஸ்டன் மருத்துவமனைக்கு பென்னி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த மாதம் 17ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.
குயில்ஃபோர்டு மருத்துவமனையில் பணிபுரிந்த ஜூலியா, ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்ததால் அவருக்கு தொற்று ஏற்படவில்லை.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திரு பென்னி, தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்புவாரா என்பது சந்தேகத்துக்கிடமானதை அடுத்து, சுமார் 25 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததாகக் கூறினார் எலேனார்.
பல சமயங்களில் திருமணம் செய்துகொள்வது பற்றி இருவரும் பேசினாலும் அதனைச் செயல்படுத்தவில்லை என்று கூறப்பட்டது.
ஒன்பதாவது வயதிலிருந்து பென்னியிடம் பூப்பந்தாட்டம் கற்றுக்கொண்ட எலேனார், பின்னர் இங்கிலாந்தின் தேசிய விளையாட்டாளரானார்.
கொரோனா தொற்று காரணமாக அசாதாரணமான சூழல்களில் மட்டுமே திருமணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவர்களது திருமணம் முடிவான 24 மணி நேரத்தில் கிங்ஸ்டன் மருத்துவமனையின் சுகாதாரப் பணியாளர்கள் மருத்துவமனையின் ஓர் அறையை பலூன்களால் அலங்கரித்ததுடன் திருமணத்துக்காக கேக் ஒன்றையும் ஏற்பாடு செய்தனர்.
முகக்கவசங்களுடன் அந்த அறைக்கு மணமக்கள் அழைத்து வரப்பட்டனர். மணமகளின் கையைப் பிடித்த வண்ணம் திருமண உறுதிமொழியை எடுத்துக்கொண்ட திரு பென்னி, திருமணச் சான்றிதழிலும் கையொப்பமிட்டார்.
ஜனவரி 8, காலை 11.30 மணியளவில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

அப்போது சுமார் 60 வயதான திரு பென்னியின் வாழ்க்கை பெரிதும் மாறியது.
பென்னி - ஜூலியா தம்பதியருக்கு 3 மகள்கள், நான்கு பேரப்பிள்ளைகள் இருக்கின்றனர்; இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.