மியன்மாரில் போராட்டக்காரர்களைக் கலைக்க ஆகாயத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு, கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீச்சு

மியன்மாரில் ஜனநாயக ஆட்சி மாற்றத்தைத் தடைச் செய்யும் ராணுவம் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தடைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களைக் கலைக்க இன்று அந்நாட்டு போலிஸ் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தியதுடன் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியுள்ளது.

பிப்ரவரி முதல் தேதி நிகழ்ந்த ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து, 53 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட மியன்மாரில் அரசு அலுவலகங்களுக்கு எதிராக மக்கள் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பள்ளிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன.

Remote video URL

கொவிட்-19 கிருமிப் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் செயலிழந்துள்ளன.

நிலைமையைக் கட்டுப்படுத்த அங்கு பல நகரங்களில் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. போராட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவ ஆட்சி மன்றம் கடுமையான எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது.

எனினும், நான்காவது நாளாக அங்கு போராட்டங்கள் வலுப்பட்டு வருகின்றன.

முன்னைய ராணுவ ஆட்சி மன்றம் தலைநகரமாக அமைத்த நேப்பிடோ நகரில் இன்று போலிசார் மக்களை நோக்கி தண்ணீரைப் பீய்ச்சினர். பின்னர் ஆகாயத்தை நோக்கி எச்சரிக்கை குண்டுகளைச் சுட்டனர். பிறகு ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தி மக்களைத் தாக்கினர் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஏஎஃபி செய்தி நிறுவனத்திடம் கூறினர்.

ரப்பர் குண்டுகளால் காயமடைந்த மூவருக்கு சிகிச்சையளித்ததாக அங்குள்ள அவசரகால மருந்தகம் கூறியது.

“ராணுவ சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவருங்கள்” என்று தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டபோது மக்கள் கூச்சலிட்டனர்.

துப்பாக்கிச் சூட்டு சத்தங்களுக்கிடையே மக்கள் ஓடுவதை சமூக ஊடகப் படங்கள் காட்டின.

மற்றொரு சம்பவத்தில் மண்டலே நகரில் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக செய்திகள் உறுதிப்படுத்தின.

யங்கூன், நேப்பிடோ, மண்டலே உள்ளிட்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் எல்லா இடங்களிலும் ஐந்து பேருக்கு மேல் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கும் பல நகரங்களில் விதிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும், இன்று யங்கூனின் பல இடங்களில் புதிதாக போராட்டங்கள் வெடித்தன.

திருவாட்டி ஆங் சான் சூச்சியின் தேசிய இயக்க தலைமையகத்துக்கு முன்பும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். ஆங் சான் சூச்சி உட்பட அரசியல் தலைவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதை அவர்கள் கண்டித்தனர்.

இதற்கிடையே, பெரும் திரளான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதால் ராணுவ ஆட்சி மன்றத் தலைவர் ஜெனரல் மின் அங் ஹெலெங் நேற்று தொலைக்காட்சியில் ஆட்சிக் கவிழ்ப்பைத் தற்காத்து பேசியுள்ளார்.

மியன்மார் மீது முன்பு தடைகள் விதிக்கப்பட்டது பயனளித்தால் மீண்டும் அதுபோல் உலக நாடுகள் தடைகள் விதிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

நியூசிலாந்து மியன்மார் உயர் அரசு அதிகாரிகளுடனான தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டுள்ளதுடன், மியன்மார் ஆட்சி மன்றக் குழுத் தலைவர்கள் நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொள்வதற்கும் தடைவிதித்துள்ளது.

அத்துடன், மியன்மார் ராணுவத் தலைவர்களுக்குப் பயனளிக்கக்கூடிய அனைத்து உதவித் திட்டங்களையும் ரத்து செய்வதாக நியூசிலாந்து பிரதமர் ஆர்டன் தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!