கோலாலம்பூர்: அடுத்த பத்து ஆண்டுகளில் மலேசியாவில் 5ஜி கட்டமைப்பை அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் (15 பில்லியன் ரிங்கிட்) $4.9 பில்லியன் ஒதுக்கியுள்ளது.
இதன்மூலம் மலேசியர்களுக்கு மேலும் விரைவான, அகன்ற இணையச் சேவை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு இறுதிக்குள் மலேசியாவில் உள்ள சில இடங்களில் 5ஜி இணைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்று மலேசிய மின்னிலக்கப் பொருளியல் வரைபடத் தொடக்க விழாவில் பேசிய மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் கூறினார்.
நாட்டின் சுகாதாரப் பராமரிப்புச் சேவையை 5ஜி இணைப்பு மேம்படுத்தும் என்று திரு முகைதீன் தெரிவித்தார். நாள்பட்ட நோயால் அவதியுறும் நோயாளிகளைக் கண்காணிப்பதற்கான செயலிகள், தனியாக வசிக்கும் முதியோருக்கான அவசரகால உதவி செயலிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த 5ஜி இணைப்பு தேவையானது என்றார் அவர். கொவிட்-19 சூழல் காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்யும், கல்வி கற்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் மேலும் விரைவான இணையச் சேவைக்கு அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் முகைதீன் தெரிவித்தார்.
இணைய இணைப்பு கிடைக்க மாணவர்கள் சிலருக்கு மரங்கள், குன்றுகள் மேல் ஏற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் மலேசிய அரசாங்கம் 5ஜி இணைப்பை அறிமுகப்படுத்த விரைகிறது.
சாபா, கிளந்தான் போன்ற மாநிலங்களில் இணையச் சேவை அவ்வளவாக இல்லாததால் மாணவர்கள் சிரமப்படுவதாகக் கூறப்படுகிறது.
தற்போதைய 4ஜி இணைப்பைவிட 5ஜி இணைப்பால் 20 மடங்கு வேகத்துக்கு இணையச் சேவையை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கொவிட்-19 நெருக்கடிநிலை ஏற்பட்டதிலிருந்து கடந்த ஓராண்டாக மின்னிலக்கத் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் இன்னும் தெளிவாக தெரிகிறது.
“சீரான காலகட்டங்களில் தொழில்நுட்பம் சௌகரியத்தைத் தருகிறது. அதே சமயத்தில் கடுமையான சவால்கள் ஏற்படும்போது முக்கிய கருவியாக அது விளங்கு கிறது,” என்று திரு முகைதீன் தெரிவித்தார்.