சிட்னி: ஆஸ்திரேலியாவின் ஆகப்பெரிய பொருளியல் மாநிலமான நியூ சவுத் வேல்ஸின் முதல்வர் பதவி விலகியுள்ளார்.
ஊழல் தொடர்பில் அவர் விசாரிக்கப்படுவதாக ஊழல் கண்காணிப்பு ஆணையம் நேற்று தெரிவித்தது. இதையடுத்து கிளாடிஸ் பெரஜிக்லியானின் பதவி விலகல் அறிவிப்பு வெளியானது.
சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா ஆகியவற்றைவிட பெரிய பொருளியல் மாநிலமான நியூ சவுத் வேல்ஸ், அண்மைய கிருமிப் பரவலுக்கு எதிராக கடுமையாகப் போராடி வருகிறது.
ஒரு மாத முடக்கத்திற்கு முடிவு கட்டி நவம்பரில் அனைத்துலக எல்லைகளைத் திறக்கவும் அது திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் கிளாடிஸ் பெரஜிக்லியான் பதவி விலகியுள்ளார்.
ஊழலுக்கும் அவருக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறதா என்பது பற்றி ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவிக்கவில்லை.
ஆனால் பொது நம்பிக்கையை மீறினாரா அல்லது அத்தகைய நடவடிக்கையில் அவர் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று ஆணையம் குறிப்பிட்டது.
'ஆப்பரேஷன் கெப்பல்' எனும் விசாரணையின் ஒரு பகுதியாக பொது விசாரணைகள் நடத்தப் படும் என்று ஆணையம் மேலும் கூறியது. ஊழல் விசாரணையில் கவனம் செலுத்தப்படும் ஒரு மாநில சட்டமன்ற உறுப்பினருடன் ஒரு காலத்தில் திருமதி பெரஜிக் லியானுக்கு இருந்த ரகசிய உறவு குறித்தும் விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
"நான் நேர்மையுடன் செயல் பட்டு வந்துள்ளேன். நீண்டகாலம் விசாரணை நடைபெற வாய்ப்பு உள்ளதால் பதவியிலிருந்து விலகு கிறேன்," என்று திருமதி பெரஜிக்லியான் கூறியுள்ளார்.