புக்கிட்: தாய்லாந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பிரபல சுற்றுலாத்தலமான புக்கிட், பேங்காக் நகரங்களைச் சுற்றுலாப் பயணிகள் பலர் மொய்த்தனர்.
கிட்டத்தட்ட 18 மாதங்களுக்குப் பிறகு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை நேற்று வரவேற்ற தாய்லாந்து, வெளிநாட்டுப் பயணிகள் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவைஇல்லை என்று முன்பே கூறியிருந்தது.
புக்கிட், பேங்காக் விமான நிலையத்தில் சென்றிறங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள்.
பேங்காக் விமானநிலையத்திற்கு சுமார் 30,000 சுற்றுலாப் பயணிகள் வரக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக தாய்லாந்து விமானப் போக்குவரத்துத் துறை கூறியிருந்தது.
சுற்றுலாத் துறை வருமானத்தை பெரிதும் நம்பியிருக்கும் தாய்லாந்து, கிருமிப் பரவல் காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சுமார் 80 விழுக்காட்டு சரிவைச் சந்தித்தது.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு
உள்ளதால், அடுத்த ஆண்டு சுமார் 10 முதல் 15 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வரக்கூடும் என்றும் வருவாய் 30 பில்லியன் டாலரைத் தாண்டும் என்றும் தாய்லாந்து அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.