கிளாஸ்கோ: காடுகள் அழிக்கப் படுவதை வரும் 2030ஆம் ஆண்டிற்குள் முடிவுக்கு கொண்டு வர 100க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் உறுதி பூண்டுள்ளனர்.
கிளாஸ்கோவில் இரண்டு வாரங்களுக்கு நடைபெறவுள்ள பருவநிலை உச்சநிலை மாநாட்டில் இந்த முடிவு எட்டப்பட்டது.
இதில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், அதனை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
உலகின் 85 விழுக்காட்டு காடு
களைக் கொண்டிருக்கும் பிரேசில், இந்தோனீசியா, காங்கோ ஆகிய நாடுகளும் இந்த உறுதிமொழியில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த உறுதிமொழி கிட்டத்தட்ட 19.2 பில்லியன் அமெரிக்க டாலர் பொது, தனியார் நிதியை உள்ளடக்கியது.
சேதமடைந்த நிலத்தை மீட்
டெடுக்கவும் காட்டுத்தீயைச் சமாளிக்கவும் பழங்குடி சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்காகவும் இந்த நிதியின் ஒரு பகுதி வளரும் நாடு
களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.
உணவு, செம்பனை எண்ணெய், சோயா, கொக்கோ போன்ற பிற விவசாயப் பொருட்களின் உலகளாவிய வர்த்தகத் தேவைக்காக காடுகளை அழிப்பதை நிறுத்தவும் 28 நாடுகள் உறுதி அளித்துள்ளன.
"கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க இந்தோனீசியாவால் பெருமளவு பங்களிக்க முடியும். ஆனால் பருவநிலை மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ள வளர்ந்த நாடுகள் கூடுதல் நிதி அளிப்பதோடு தொழில்நுட்ப ரீதியாகவும் உதவ வேண்டும்," என்று இந்தோனீசிய அதிபர் விடோடோ கேட்டுக்கொண்டார்.
இந்த உலகளாவிய மாநாட்டை நடத்தும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், "காடுகளைப் பாதுகாப்பதற்கும் மீட்டெடுப்பதற்கும் இந்த ஒப்பந்தம் முக்கியமானது," என்றார்.
"பருவநிலை மாற்றம், நமது உலகத்திற்கும் நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்குமான வாழ்வா, சாவா பிரச்சினை," என்றார் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ-சா.
இந்த மாநாட்டில் நேரடியாக கலந்துகொள்ளாத சீனா, தனது அறிக்கையை மட்டும் அனுப்பியது. சீனா முந்திய உச்சநிலை மாநாட்டில் அளித்த உறுதிகளைத் தவிர வேறு எதற்கும் ஒப்புக்கொள்ள தயாராக இல்லை என்பதை இது காட்டுவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
உலகத் தலைவர்களின் இந்த உறுதியை பருவநிலை ஆர்வலர்கள் வரவேற்றுள்ள அதே சமயத்தில், காடழிப்பைக் குறைக்கும் முந்திய சந்திப்பின் இலக்கு தோல்வி அடைந்ததையும் சுட்டினர்.