பெய்ஜிங்: அவசர காலத்திற்கான அன்றாடத் தேவைகளைக் குடும்பங்கள் இருப்பு வைத்துக்கொள்ளுமாறு சீன அரசாங்கம் அறிவுறுத்தி
உள்ளது.
கிருமிப் பரவல், வழக்கத்திற்கு மாறான கனமழையால் காய்கறி
களின் விலை ஏற்றம் காரணமாக, விநியோக பற்றாக்குறை பற்றி கவலை எழுந்துள்ளதைத் தொடர்ந்து சீன வர்த்தக அமைச்சு இவ்வாறு கூறியுள்ளது.
இதைத் தொடர்ந்து, சீனாவின் சமூக ஊடகங்களில் பலரும் தைவானுடனான பதற்றம் அதிகரித்துள்ளதால் இவ்வாறு கூறப்பட்டிருக்கலாம் என்று கவலை தெரிவித்தனர்.
ஆனால், கிருமிப் பரவல் காரணமாக குறிப்பிட்ட சில பகுதிகள் முடக்கப்பட்டால், மக்கள் பாதிக்கப்
படாமல் இருக்கவே இந்த அறிவிப்பு வெளியானதாக எக்னாமிக் டெய்லி ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, கிருமித்தொற்று பெருமளவில் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் பெய்ஜிங்கில் மக்கள் அத்தியாவசிய காரணங்களைத் தவிர வேறு எதற்காகவும் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சீனாவில் நேற்று பதிவான 71 புதிய தொற்று சம்பவங்களில், 54 உள்ளூர் கிருமிப் பரவலாகும்.
அந்நாட்டின் வடகிழக்கு மாநிலமான ஹிலோங்ஜியாங்கில் 27 பேர் தொற்றுக்கு ஆளாகினர். ஹுபெய், கன்சு, உள் மங்கோலியா, பெய்ஜிங், நிங்சியா, ஷான்டோங், ஜியாங்சி, கிங்காய் ஆகிய நகரங்களிலும் புதிய தொற்று சம்பவங்கள் பதிவாகின.
எனவே, பெய்ஜிங்கில் மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்வதை முடிந்தளவுக்குத் தவிர்க்குமாறும் பெய்ஜிங் திரும்ப விரும்புபவர்கள் அதனைத் தள்ளிப்
போடுவது குறித்து பரிசீலிக்குமாறும் பெய்ஜிங் சுகாதார ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
கிருமித்தொற்று கண்டறியப்பட்ட சீனாவின் பிற பகுதிகளில் இருந்து செல்வோர் பெய்ஜிங்கிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.