பெர்த்: கொவிட்-19 கிருமித்தொற்று முற்றிலுமாக இல்லாத நிலையில்தான் தனது எல்லைகளைத் திறக்கப்போவதாக அறிவித்திருந்த மேற்கு ஆஸ்திரேலிய மாநிலம் தற்பொழுது அதன் நிலையை மாற்றிக்கொள்ள தயாராகி வருகிறது.
இதன்படி, உள்நாட்டில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால் தனது உள்நாட்டு, வெளிநாட்டு எல்லைகளைத் திறந்துவிடப் போவதாக அது அறிவித்துள்ளது.
இதை அறிவித்த மேற்கு ஆஸ்திரேலிய முதல்வர் மார்க் மெக்கோவன் எனினும், மக்கள்ெதாகையில் 90 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்வது அடுத்த ஜனவரி கடைசி அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில் பூர்த்தியாகும் என்றும் கூறினார்.
எனவே, அதுவரை எல்லைகள் திறக்கப்படும் சாத்தியம் இல்லை என்று நேற்று பேசிய திரு மெக்கோவன் தெரிவித்தார்.
இதனால், கிறிஸ்துமஸ் விழாக்காலத்தில் எல்லைகள் திறக்கப்படலாம் என்ற அம்மாநில மக்களின் எதிர்பார்ப்பு வீணானது.
தற்போதைய நிலையில் மேற்கு ஆஸ்திரேலியாவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஏறத்தாழ 63.7 விழுக்காட்டினர் என்று மதிப்பிடப்படுகிறது.
"சிலர் இதனால் விரக்தி மனோநிலை அடைவர் என்பதை நான் அறிவேன். ஆனால், இந்தக் கடுமையான செயல்பாட்டை எடுப்பதற்கு சரியான காரணங்கள் உள்ளன," என்றும் அவர் தெரிவித்தார்.
"அவை, மருத்துவ ஆலோசனையை பின்பற்றுவதுடன் மேற்கு ஆஸ்திரேலியாவை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதே," என்றும் தொடர்ந்து பேசிய திரு மெக்கோவன் விளக்கினார்.
எல்லைகளைத் திறந்துவிடும் அதேநேரத்தில் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட கிருமிப் பரவல் அபாயம் அதிகம் உள்ள இடங்களில் மக்கள் கட்டாய முகக்கவசம், பாதுகாப்பு இடைவெளி தூரத்தை கடைப்பிடித்தல் போன்றவையும் அமல்படுத்தப்படும் என்றும் அவர் விவரித்தார்.
அத்துடன், இரவு விடுதிகள், 1,000 பேருக்கு மேல் கூடும் நிகழ்ச்சிகள் போன்வற்றிற்க்கு செல்வோர் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் பழங்குடி இன மக்கள் வாழும் பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று அவர் தெளிவு
படுத்தினார்.