பெய்ஜிங்: சீனாவில் கொவிட்-19 கிருமி வேகமாகப் பரவி வருவதாக அந்நாட்டிலிருந்து வரும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டில் இந்தக் கிருமி கிழக்கு மாநிலங்கள் நோக்கிப் பரவி வருவதாக புளூம்பெர்க் செய்தித் தகவல் கூறுகிறது.
இதனால், அந்நாட்டு அதிகாரிகள் கிருமிப் பரவலை தடுக்கும் முயற்சியாக மேலும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று சீனாவின் சுகாதார ஆணையம் புதிதாக 68 கிருமித்தொற்று சம்பவங்களை உறுதி செய்துள்ளது.
இவற்றுடன், மேலும் 22 சம்பவங்களில் கிருமித்தொற்று இருந்தபோதிலும் அதற்கான அறிகுறிகள் வெளியே தெரிய வில்லை என்றும் ஆணையம் விளக்கியது.
சீனாவின் ஹெய்லுங்ஜியாங் மாநிலத்தில்தான் புதிய சம்பவங்களில் மூன்றில் ஒரு பங்கு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த மாநிலத்தின் எல்லையோர நகரான ஹெய்ஹே என்ற இடத்தில் புதிதாக எதிர்பாராத வகையில் தொற்றுக் குழுமம் ஒன்று உருவாகியுள்ளதாக செய்தித் தகவல்கள் தெரி விக்கின்றன.
ஆகக் கடைசியாக உருவாகியுள்ள இந்தக் கிருமித்தொற்று குழுமம் பள்ளிகளை அதிகம் பாதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.