கிளாஸ்கோ: இயற்கையைப் பாதுகாக்கவும் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த விவசாயத்தை மறுசீரமைக்கவும் 45 நாடுகள் வாக்குறுதி அளித்துள்ளதாக 'காப்26' எனும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பருவநிலை மாநாட்டை நடத்தும் பிரிட்டன் தெரிவித்துள்ளது. உலக வெப்பநிலையை அதிகரிக்கும் வாயுவில் சுமார் கால்பங்கு விவசாயம், காடுகளை அழிப்பது, நிலத்தைப் பயன்படுத்தும் முறைகளில் ஏற்பட்டுள்ள இதர மாற்றங்கள் ஆகியவற்றால் வெளியேற்றப்படுவது. உலகின் மக்கள்தொகை அதிகரித்துவரும் நிலையில் இத்தகைய காரணங்களால் ஏறும் உலக வெப்பநிலையைக் கட்டுக்குள் கொண்டுவருவது அவசியம் என்று மாநாட்டில் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கை குறிப்பிட்டது.
தொழில்துறைகள் தொடங்கப்படுவதற்கு முன் இருந்ததைக் காட்டிலும் உலக வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியசுக்கு மேல் உயராமல் பார்த்துக்கொள்வது 2015ஆம் ஆண்டு பாரிஸ் பருவநிலை உடன்பாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளில் ஒன்று. ஆகச் சவாலான இவ்விலக்கை அடைவது குறித்து நேற்று மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டது. தற்போதைய நிலவரப்படி தொழில்துறைகள் தொடங்கப்படுவதற்கு முன் இருந்ததைக் காட்டிலும் உலக வெப்பநிலை சராசரியாக 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.
இதன் தொடர்பில் இயற்கையைப் பாதுகாப்பதுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் விவசாயம் செய்யும் முறைகளுக்கு மாற அவசர நடவடிக்கை எடுக்கவும் முதலீடு செய்யவும் 45 நாடுகளின் அரசாங்கங்கள் வாக்குறுதி அளிக்கவிருந்ததாக மாநாட்டின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய பொருளியல் நாடுகளுடன் இந்தியா, இந்தோனீசியா, வியட்னாம், பிலிப்பீன்ஸ், மொரொக்கோ, உருகுவே, கானா, கபோன், எத்தியோப்பியா போன்ற வளரும் நாடுகளும் இதற்கு ஆதரவளிக்கின்றன.
இம்முயற்சிக்கு மொத்தமாகச் செலவிடப்படவுள்ள தொகை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. விவசாயம் தொடர்பிலான புத்தாக்க முயற்சிகளை ஊக்குவிக்க பொதுத் துறையில் நான்கு பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்வது தொகையில் அடங்கும்.