பேங்காக்: தாய்லாந்து தலைநகர் பேங்காக் மீண்டும் துடிப்புடன் காணப்படுகிறது. எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட முதல் வாரம் நிறைவடையும் வேளையில் சுற்றுப்பயணத் துறைக்குப் பிரபலமான தாய்லாந்து புத்துயிர் பெற்றுள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் 60க்கும் மேற்பட்ட நாடுகள், பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் தாய்லாந்திற்கு இடையூறின்றிச் செல்லலாம். பல மாதங்கள் மூடிக்கிடந்த சுற்றுலாத் தலங்களும் உணவகங்களும் மீண்டும் திறக்கப்படுகின்றன. 2019ஆம் ஆண்டில் தாய்லாந்திற்கு 1.91 ட்ரில்லியன் பாட்டுக்கும்(77.6 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளிக்கும்) அதிகமான தொகையை ஈட்ட சுற்றுப்பயணத் துறை மீண்டுவரும் என்ற நம்பிக்கை வர்த்தகர்களிடையே படிப்படியாக அதிகரித்துவருகிறது.
தாய்லாந்தில் நடப்பில் இருக்கும் பல்வேறு பயணத் திட்டங்களின்கீழ் இதுவரை மட்டுமே சுமார் 16,000 வெளிநாட்டினர் அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இம்மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து பயணத் திட்டங்கள் மேலும் பல நாடுகளுக்கு நீட்டிக்கப்பட்டன. பெரும்பாலான பயணிகள் ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. திட்டங்கள் பொருந்தும் நாடுகளிலிருந்து வரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. தாய்லாந்து சென்றவுடன் பயணிகள் கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்வர். முடிவு வரும் வரை அவர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் ஒரு நாளைக்கு இருக்கவேண்டும். அதற்குப் பிறகு நாட்டில் எங்கு வேண்டுமானாலும் போகலாம்.