ஹனோய்: வியட்னாம் தலைநகர் ஹனோயில் முதன்முறையாக நகர ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மோட்டார்சைக்கிள்களைத் தாங்கும் அந்நகரின் சாலை போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் காற்று அசுத்தமடைவதைக் குறைக்கவும் அதிகாரிகள் எடுக்கும் முயற்சிகளில் புதிய ரயில் சேவை அடங்கும்.
பல ஆண்டுகாலத் தாமதத்திற்குப் பிறகு ரயில் சேவை தொடங்கியது. அதற்கான செலவு கிட்டத்தட்ட இரண்டு மடங்கும் ஆனது. ஹனோயின் மையப் பகுதிக்கு அருகே இருக்கும் காட் லின் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கிய சேவை அதிக மக்கள்தொகையுடன் நெரிசலாக இருக்கும் நகரின் கிழக்குப் பகுதியை நோக்கிச் செல்கிறது.
ஒன்பது மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட ஹனோயில் மோட்டார்சைக்கிள்களால் ஏற்படும் சாலைப் போக்குவரத்து நெரிசல் உலகம் அறிந்தது. அதன் சாலைகளைக் கடப்பது பாதசாரிகளுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் ஒன்று. 2008ஆம் ஆண்டு ஹனோயில் இரண்டு மில்லியனாக இருந்த மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு 5.7 மில்லியனுக்கு அதிகரித்ததென்று காவல்துறையினர் தெரிவித்தனர். இக்காலகட்டத்தில் கார் வாகனங்களின் எண்ணிக்கையும் 185,000லிருந்து 700,000க்கு ஏறியது.