மலாக்கா: மலேசியாவின் மலாக்கா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் பெரும்பாலும் 28 தொகுதிகளிலும் மும்முனைப் போட்டி இருக்கும் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன. மலாக்கா மாநிலத்தில் நடைபெற இருப்பது 15வது சட்டமன்றத் தேர்தல். இம்மாநிலத்தில் மொத்தம் 495,195 வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணைய இயக்குநர் அப்துல் கனி சாலி நேற்று கூறியதாக 'நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' தனது இணையச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் ராணுவ வீரர்கள், போலிஸ் படையினர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்போரும் அடங்குவர்.
தொகுதிக்கு ஒன்றாக 28 மனுத்தாக்கல் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. காலை 8 மணிக்கு மனுத்தாக்கல் தொடங்கும். அதற்கான ஒத்திகை நேற்று அந்த நிலையங்களில் நடத்தப்பட்டது. ஒவ்வொரு மனுத்தாக்கல் நிலையத்திலும் கொவிட்-19 தொற்று அறிகுறி உள்ள வேட்பாளர்களுக்கும் அவர்களை முன்மொழிவோருக்கும் தனி கூடாரம் அமைக்கப்பட்டுள்ளதாக அந்த இணையச் செய்தி கூறியது. சளி, இருமல் போன்ற அறிகுறிகளோடு உடல் வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியசுக்கு மேல் இருப்போர் இந்தக் கூடாரத்தில் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் வாக்களிப்பு மையங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
மாநிலம் முழுவதும் 248 வாக்களிப்பு மையங்கள் இயங்கும். 20ஆம் தேதி ஒரே நாளில் வாக்களிப்பு நடைபெறும். முன்கூட்டிய வாக்களிப்பு 16ஆம் தேதி நடைபெறும் என்றும் அதற்காக 47 வாக்களிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்தது. மனுத்தாக்கல் முடிவுற்றதும் இன்று தொடங்கும் பிரசாரம் 12 நாட்களுக்கு நீடிக்கும்.
28 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேசிய முன்னணி, பக்கத்தான் ஹரப்பான் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் ஆகிய கூட்டணிகள் வேட்பாளர்களை நிறுத்துவதாகக் கூறியிருப்பதால் பெரும்பாலும் எல்லாத் தொகுதியிலும் மும்முனைப் போட்டி இருக்கக்கூடும்.
முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் தமது பெரிக்காத்தான் கூட்டணி போட்டியிடுவது பற்றி அறிவித்துவிட்டார். கூட்டணியில் உள்ள பெர்சத்து கட்சி 15 தொகுதிகளிலும் பாஸ் கட்சி 8 தொகுதிகளிலும் கெரக்கான் கட்சி ஐந்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தும் என்று அவர் கூறினார்.