சிட்னி: ஆஸ்திரேலியாவின் ஆகப்பெரிய நகரான சிட்னியில் இன்று (நவம்பர் 8) முதல் சமூக இடைவெளிக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுகின்றன.
அங்குள்ள மக்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினர் இரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளதைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் ஓரளவு விலக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
சிட்னி நகரை உள்ளடக்கிய நியூ சௌத் வேல்ஸ் மாநிலம் முழுவதும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.
வீடுகளுக்கு வருகையளிக்கும் விருந்தினர்கள், வெளிப்புற ஒன்றுகூடல்கள் ஆகியவை தொடர்பில் இன்று முதல் கட்டுப்பாடுகள் இருக்காது.
"கொள்ளைநோயைத் துரத்தி அடிக்கும் நாட்டின் முயற்சியில் நாங்கள் தீவிரமாக உள்ளோம்," என்று கூறிய மாநில முதல்வர் டோமினிக் பெரோடெட், மக்களில் 95 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடைவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகளில் இறங்குமாறு மக்களையும் அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, மாநிலத் தலை
நகர் சிட்னியில் நேற்று ஒன்று
கூடிய நூற்றுக்கணக்கான மக்கள் தடுப்பூசி போடுவதைக் கட்டாயமாக்கியதற்கு எதிராக அமைதிப் போராட்டம் நடத்தினர். தடுப்பூசியைக் கட்டாயமாக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்ளும் வாசகங்களை ஏந்தியவாறு அவர்கள் வரிசையாகச் சென்றனர்.