வெலிங்டன்: நியூசிலாந்தில் சனிக்கிழமை (நவம்பர் 6) 206 பேருக்கு சமூக அளவில் புதிதாக கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. கொள்ளைநோய் கடந்த ஆண்டு பரவத் தொடங்கியது முதல் அந்த நாட்டில் ஒரே நாளில் 200க்கும் மேல் உள்ளூர் தொற்று எண்ணிக்கை பதிவாகி இருப்பது இப்போதுதான்.
நாட்டின் ஐந்து மில்லியன் மக்களுக்குத் தடுப்பூசி போட தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில் நியூசிலாந்தில் தொற்று திடீரென அதிகரித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் ெசய்தி ஒன்று கூறுகிறது.
அங்கு டெல்டா வகை கிருமி பரவியதால் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக நடப்பில் இருந்த கட்டுப்பாடுகளை இன்று திங்கட்
கிழமை தளர்த்த அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டோரில் 200 பேர் மக்கள் நெருக்கம் மிகுந்த ஆக்லாந்து நகரைச் சேர்ந்தவர்கள்.
புதிய தொற்று பதிவாவது ஒருபுறம் இருந்தாலும் ஆக்லாந்துவாசிகள் கோடைகால விடுமுறை மற்றும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் தொடர்பான பயணங்களைத் தொடங்க பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் விருப்பம் தெரிவித்துள்ளார்.