ஜெனீவா: உலகில் டெல்டா வகை கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகி வருவோரின் எண்ணிக்கை குறைந்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் தினமும் புதிதாகக் கிருமித்தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை சராசரியாக 36 விழுக்காடு குறைந்துள்ளது. உலகளவில் கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 250 மில்லியனைத் தொடவுள்ளது.
ஜப்பானில் 15 மாதங்களில் முதன்முறையாக கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளான யாரும் மரணமடையவில்லை எனச் சில உள்ளூர் ஊடகங்கள் கூறின. அந்நாட்டில் கிருமித்தொற்று சம்பவங்களும் மரணங்களும் கணிசமாகக் குறைந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்பு கிருமிப் பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்ட மற்றோர் ஆசிய நாடான இந்தோனீசியாவின் மக்கள்தொகையில் பாதிப் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இப்போது பலருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, அதன் மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியைப் போடத் தொடங்கியுள்ளது. சிட்னி நகரில் மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
எனினும், ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மட்டுமே உணவகங்கள் போன்ற இடங்களுக்குள் நுழைய அவர்களுக்குத் தடுப்பூசி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. போலி சான்றிதழ்களுக்கென ஒரு சந்தையே அந்நாட்டில் உருவாகியுள்ளது. அவற்றைக் கொண்டு சிலர் சட்டவிரோதமாக நுழையக்கூடாத இடங்களுக்குச் செல்கின்றனர்.