கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிடமிருந்து பறிமுதல் செய்த பொருட்களை நிரந்தரமாக அவரிடமிருந்து அபகரிக்கும் முயற்சியில் மலேசிய அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. 1எம்டிபி நிதியிலிருந்து வந்த பணத்தைக் கொண்டுதான் திரு நஜிப் அப்பொருட்களை வாங்கினார் என்பதை அரசாங்கம் நிரூபிக்கத் தவறிவிட்டது எனக் கூறி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது.
தீர்ப்பிற்கு எதிராக அரசாங்கம் மேல்முறையீடு செய்யும் என்று துணை அரசு வழக்கறிஞர் திரு ஹேரிஸ் ஓங் முகம்மது ஜெஃப்ரி ஓங் தெரிவித்தார். திரு நஜிப்புடன் தொடர்புடைய வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 114 மில்லியன் ரிங்கிட் தொகை, 1எம்டிபி நிதியிலிருந்து திருடப்பட்டது என்பதை மலேசிய அரசாங்கம் கடந்த மே மாதம் நிரூபிக்கத் தவறியதைத் தொடர்ந்து இவ்வாறு நிகழ்ந்துள்ளது. அந்தத் தொகை தேர்தல் செலவுக்கானது எனத் திரு நஜிப் கூறியிருந்தார்.