லிவர்பூல்: லிவர்பூல் பெண்கள் மருத்துவமனைக்கு வெளியே நிகழ்ந்த கார்வெடிப்பு சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீவிரவாதத்திற்கு எதிரான சட்டத்தின்கீழ் 21, 26, 29 வயதுடைய அவர்கள் கென்சிங்டன் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரேட்டர் மான்செஸ்டர் போலிசார் கூறினர். ஆனால் இது தீவிரவாத சம்பவமாக அறிவிக்கப்படவில்லை.
உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. வெடிப்பு சத்தத்தைத் தொடர்ந்து கார் தீப்பற்றி எரிந்தது.
இதில் அந்த காரில் பயணித்த ஆடவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர் யார் என்று இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.
காயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் கூறப்பட்டது.
வெடிப்பு நிகழ்வதற்குச் சற்று முன்புதான் அந்த கார் அங்கு நிறுத்தப்பட்டதாக போலிசார் கூறினர். இச்சம்பவம் குறித்து போலிசாரும் துப்பறியும் அதிகாரிகளும் லிவர்பூல் பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.