லித்துவேனியாவுடனான அரசதந்திர உறவுநிலையைக் குறைத்த சீனா
பெய்ஜிங்: சீனா லித்துவேனியாவுடனான அதன் அரததந்திர உறவுநிலையைக் குறைத்துள்ளது. பால்டிக் வட்டார நாடான லித்துவேனியா, தைவானில் தூதரக அலுவலகத்தை அமைக்க அனுமதித்துள்ளதைக் காரணமாகக் கூறி சீனா அந்த நடவடிக்கையை எடுத்தது.
சீன வெளியுறவு அமைச்சின் இணையத்தளத்தில் அது குறித்து தெரிவிக்கப்பட்டது. லித்துவேனியா, சீன அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அலட்சியப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.
ஏற்கெனவே அந்த விவகாரம் தொடர்பாக சீனா, அந்நாட்டுக்கான தனது தூதரை மீட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையே, ஒன்பது சீனப் போர்விமானங்கள் தைவானின் ஆகாயவெளிக்குள் நேற்று பறந்துசென்றதாக தைவானின் தற்காப்பு அமைச்சு கூறியுள்ளது.
அதில் இரண்டு போர்விமானங்கள், அணுவாயுதங்கள் தாங்கிச் செல்லக்கூடியவை என்றும் தைப்பே கூறியது.
தைவானுக்கும் பிலிப்பீன்சுக்கும் இடையிலான பாஷி கடல் இடைவழிக்கு அந்த இரண்டு விமானங்கள் பறந்துசென்றதாகக் கூறப்பட்டது.
ஜெருசலத்தில் துப்பாக்கிச்சூடு
ஜெருசலம்: ஜெருசலத்தின் பழைய நகரில் பாலஸ்தீன துப்பாக்கிக்காரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் மூன்று பேர் காயமுற்றனர்.
ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த அந்த நபரைப் பின்னர் இஸ்ரேலிய போலிசார் சுட்டுக் கொன்றனர்.
இஸ்ரேலிய பாலஸ்தீனத் தரப்புகளுக்கிடையே அடிக்கடி சண்டை நிகழும் அல்-அக்ஸா பள்ளிவாசல் அருகே துப்பாக்கிச்சூடு நடந்தது. இரு தரப்பும் அந்தப் பள்ளிவாசலைச் சொந்தம் கொண்டாடுகின்றன.
கடந்த நான்கு நாட்களில் ஜெரூசலத்தில் நிகழ்ந்த இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
மியன்மாரில் அலையடித்து 15 பேர் பலி
யங்கூன்: மியன்மாரின் தென்கிழக்கில் உள்ள மோன் மாநிலத்தில் நேற்று கடல் அலை அடித்து குறைந்தது 15 பேர் உயிரிழந்துவிட்டனர். இன்னும் பலரைக் காணவில்லை என்று உள்ளூர் போலிஸ் அதிகாரி ஒருவர் சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
பௌத்த ஆலயத்தில் வழிபட நேற்று காலைய கடற்கரையில் நடந்துசென்றவர்களை பெரிய அலை ஒன்று அடித்துக்கொண்டு சென்றதாக அவர் கூறினார்.
தான்பியூஸாயாட் எனும் ஊரில் சம்பவம் நடந்தது. காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்கிறது.
அட்லாண்டாவில் தெரியாமல் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்
அட்லாண்டா: அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள அனைத்துவலக விமான நிலையத்தில் தெரியாமல் தமது துப்பாக்கியால் சுட்டவரை போலிசார் தேடி வருகின்றனர்.
கென்னி வெல்ஸ் எனும் 42 வயது பயணி தமது பயணப்பெட்டியில் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார்.
எதிர்பாராமல் அந்தத் துப்பாக்கி பாதுகாப்புச் சோதனையின் போது வெடித்து சுட்டதில், மூவருக்குக் காயம் ஏற்பட்டது. அவர்களின் உயிருக்கு ஆபத்தில்லை என்று அமெரிக்க போக்குவரத்துப் பாதுகாப்புத் துறை கூறியது.
விமான நிலையத்தை விட்டு ஓட்டம்பிடித்த துப்பாக்கி உரிமையாளருக்கு எதிராகக் கைதாணை பிறப்பிக்கப்பட்டது.
மருத்துவ சாதனங்களில் தோல்நிறப் பாகுபாடு: பிரிட்டன் ஆய்வு
லண்டன்: மருத்துவ சாதனங்களின் தயாரிப்பில் அமைப்புரீதியான பாகுபாடு உள்ளதா என்று ஆராய தன்னிச்சையான மறுஆய்வு நடத்தப்படும் என்று பிரிட்டனின் சுகாதார அமைச்சர் சஜிட் ஜாவேட் கூறியுள்ளார்.
சண்டே டைம்ஸ் செய்தித்தாளில் அது பற்றி திரு சஜிட் எழுதினார்.
உயிர்வாயு அளவைக் கண்காணிக்கும் ஆக்சிமீட்டர் எனும் கருவிகளைக் கறுப்பான தோல் கொண்டவர்களின் மீது பயன்படுத்தும்போது, முடிவுகள் துல்லியமாக இல்லை என்று ஆய்வுகள் கூறுவதை அவர் சுட்டினார்.
மருத்துவத் துறை சாதனங்களை உருவாக்கும்போது இனம், பாலியல் போன்ற அம்சங்களில் பாகுபாடு ஏற்படுகிறதா என்பதை மறுஆய்வு கண்டறியும்.

