மலாக்கா: மலாக்கா மாநிலச் சட்ட சபைத் தேர்தலில் அம்னோ கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து அடுத்த தேர்தல் விரைவில் நடைபெறும் சாத்தியம் குறைவு என்று மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கோடிகாட்டியுயுள்ளார்.
நேற்று முன்தினம் நடந்த தேர் தலில் 28 சட்டசபை இடங்களில் அம்னோ கூட்டணி 21ஐ வென்றது.
எனினும், வாக்காளர் எண்ணிக்கை பற்றி தேசிய கூட்டணி முதலில் தீவிர ஆய்வு நடத்தவேண்டும் என்று கூறினார். தேர்தலில் 65 விழுக்காட்டு வாக்காளர்கள் தான் வாக்களித்ததை திரு கைரி சுட்டினார்.
அம்னோ கூட்டணியின் நான்கு சட்டசபை உறுப்பினர்கள் கட்சி மாறியதைத் தொடர்ந்து மலாக்கா சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் அம்னோ தலைமை யிலான தேசிய கூட்டணிக்கு 21 இடங்களும், பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு 5 இடங்களும் பெரிக்காத்தான் நேஷனலுக்கு 2 இடங்களும் கிடைத்தன.
அம்னோ கூட்டணியின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து விரைவில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற ஊகங்கள் பரவியுள்ளன.
இவ்வேளையில் மலாக்கா முதலமைச்சராக திரு சுலைமான் முகமது அலி, சனிக்கிழமை பின்னிரவு ஒரு மணிக்குப் பதவியேற்றதால் அம்னோவில் சலசலப்பு ஏற்பட்டது.
தஞ்சோங் பிடாரா தொகுதிக்கான சட்டசபை உறுப்பினரும் மலாக்காவுக்கான அம்னோ தலைவருமான திரு ரவுஃப் யுசோ முதலமைச்சர் பதவியைப் பெற முயன்றார் என்று அம்னோ வட்டாரங்கள் கூறின.
அதனால்தான் பதவியேற்பு விழா அவசர அவசரமாக நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.