சிட்னி: ஆஸ்திரேலியாவில் வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் எல்லைக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுவதாக அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, சென்ற ஆண்டு மே மாதம் தனது எல்லைகளை மூடியது ஆஸ்திரேலியா.
தற்போது அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதால், ஆஸ்திரேலியக் குடியுரிமை வைத்திருப்பவர்களின் வெளிநாட்டு குடும்ப உறுப்பினர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வர, சில வாரங்களுக்கு முன்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதன் அடுத்தகட்டமாக, தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவர்கள், தொழிலதிபர்கள் உட்பட ஆஸ்திரேலிய விசா வைத்திருப்பவர்கள் வரும் டிசம்பர் 1ஆம் தேதியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மோரிசன் கூறினார்.
மேலும், அவர்கள் பயண விலக்கு கோரி விண்ணப்பிக்க வேண்டியது இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி, 235,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆஸ்திரேலிய விசா வைத்திருந்தனர். அவர்களில் ஏறக்குறைய 160,000 பேர் மாணவர்கள்.
வெளிநாட்டு மாணவர்கள் மீண்டும் அனுமதிக்கப்படுவது ஆஸ்திரேலியக் கல்வித் துறைக்கும் பொருளியலுக்கும் பெரும் ஊக்கமாக இருக்கும். வெளிநாட்டு மாணவர்களால் அந்நாட்டுப் பொருளியலுக்கு ஆண்டுக்கு 35 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (S$34.5 பி.) வருவாய் கிடைக்கும்.
அத்துடன், வெளிநாட்டு ஊழியர்களின் வருகை அங்குள்ள ஊழியர் பற்றாக்குறையை பெரிதும் தீர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.