கோலாலம்பூர்: சிங்கப்பூர்-மலேசியா இடையில் தனிமைப்படுத்தல் இல்லாத, நில வழிப் பயணத்திற்கான சோதனையோட்டம் நேற்று மேற்கொள்ளப்பட்டதாக மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜோகூர் கடற்பாலத்தில் தொடங்கப்படவிருக்கும் தனிமைப்படுத்தல் இல்லாத பயணத்திற்கான சோதனையோட்டத்தை இரு நாட்டு அதிகாரிகளும் நடத்தியதாக அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூர்-மலேசியா நில எல்லை, மாத இறுதியில் திறக்கப்படலாம் என்று சிங்கப்பூர் அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், இந்த சோதனையோட்டம் இடம்பெற்றுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையிலான நில எல்லைகள் திறக்கப்படும் முதல் வாரத்தில் கிட்டத்தட்ட 1,440 பேரும் இரண்டாவது வாரத்தில் 2,500 பேரும், அதற்கு அடுத்த வாரத்தில் 5,000 பேரும் பயணம் மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக ஜோகூர் முதல்வர் ஹஸ்னி முகம்மது ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, மலாக்கா தேர்தல் முடிவுற்றுள்ளதைத் தொடர்ந்து, கிருமிப் பரவலின் நான்காவது அலையை எதிர்கொள்ள மலேசியா தயாராக உள்ளதாக அந்நாட்டின் துணை சுகாதார அமைச்சர் ஆரோன் அகோ சொன்னார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து மலாக்காவில் கிருமித்தொற்று சம்பவங்கள் சற்று அதிகரித்துள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர் அரசாங்கம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் சொன்
னார்.