கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை

கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை

2 mins read
f9bd3243-ddfe-4d1b-932f-4f2876b20722
கடந்த வியாழக்கிழமை கோலாலம்பூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய சீன நாட்டவர் ஒருவர் அங்கு தடுத்துவைக்கப்பட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து, அதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அஸாம் பக்கி தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை கோலாலம்பூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய சீன நாட்டவர் ஒருவர் அங்கு தடுத்துவைக்கப்பட்டார். தாம் பணம் வழங்கினாலொழிய குடிநுழைவு அதிகாரிகள் தம்மை மலேசியாவுக்குள் நுழைய மறுத்துவிட்டதாக அந்த மாது கூறினார்.

அவருடன் பயணம் செய்த மற்றொரு மாதுக்கு இந்தப் பிரச்சினை ஏற்படவில்லை.

இந்நிலையில், அந்த மாது எதிர்கொண்ட பிரச்சினை குறித்து குவாங்ஸோவில் உள்ள மலேசிய துணைத் தூதரகத்தில் இருந்து தமக்கு அழைப்பு வந்ததாக சுற்றுப்பயண, கலை, கலாசாரத்துறை அமைச்சர் தியோங் கிங் சிங் தி ஸ்டார் நாளிதழிடம் வெள்ளிக்கிழமை கூறினார்.

அன்றைய தினம் திரு தியோங் கோலாலம்பூர் விமான நிலையத்திற்குச் சென்றார். மொழி வேறுபாடு காரணமாக கருத்து வேறுபாடு நிலவியதாக குடிநுழைவு அதிகாரிகள் திரு தியோங்கிடம் கூறினர்.

அந்த மாது தடுத்துவைக்கப்பட்டு இருந்த 15 மணி நேரத்தில் அவருக்கு ஒருமுறை மட்டுமே உணவு வழங்கப்பட்டதாக திரு தியோங் பின்னர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

நுழைவுக் கட்டணமாக 18,000 ரிங்கிட் (S$5,200) செலுத்தினால் மட்டுமே அந்த மாதை விடுவிக்க முடியும் என்று அதிகாரி ஒருவர் அவரிடம் கூறியதாக திரு தியோங் சொன்னார். மேலும், மறுநுழைவுக் கட்டணமாக 3,000 ரிங்கிட்டும் விசா கட்டணமாக 12,000 ரிங்கிட்டும் செலுத்த வேண்டும் என்று அந்த மாதிடம் கூறப்பட்டது.

நாற்பதுகளில் இருப்பதாக நம்பப்படும் அந்த இரு பயணிகளின் கைப்பேசிகளையும் குடிநுழைவு அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக திரு தியோங் கூறினார்.

“இந்தச் சம்பவத்தால் அந்தப் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர். இது அவர்களுக்குப் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலைய அதிகாரிகள் உடனான உரையாடல்கள் அனைத்தையும் அந்தப் பயணிகள் குரல்பதிவு செய்துள்ளனர். சீனாவுக்குத் திரும்பியவுடன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை வெளிக்கொணர அவர்கள் எண்ணம் கொண்டுள்ளனர்,” என்றார் திரு தியோங்.

தாம் தலையிட்ட பிறகே மலேசியாவுக்குள் நுழைய அந்த மாதுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக திரு தியோங் சொன்னார்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து அனைத்துக் கோணங்களிலும் விவரங்களைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் ருஸ்லின் ஜூசோ வெள்ளிக்கிழமை கூறினார்.

குறிப்புச் சொற்கள்