வாஷிங்டன்: சீனாவில் குறிப்பிட்ட சில தொழில்நுட்ப முதலீடுகள் செய்ய அமெரிக்க நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஆணையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதன்கிழமையன்று கையெழுத்திட்டார்.
இதன்படி குறைகடத்தி, நுண்மின்னணுவியல், குவாண்டம் தகவல் தொழில்நுட்பம், குறிப்பிட்ட சில செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் அமெரிக்க நிறுவனங்களால் சீனாவில் முதலீடு செய்ய முடியாது.
முக்கிய தொழில்நுட்பம், ராணுவத்துக்கு அவசியமான கருவிகள், உளவியல், கண்காணிப்பு, இணைய ஆற்றல் ஆகியவற்றில் சீனா போன்ற நாடுகள் வெகுவாக மேம்பட்டு வருவதாக அதிபர் பைடன் தெரிவித்தார்.
இதை எதிர்கொள்ள தேசிய அவசரநிலையை அறிவிக்க அமெரிக்க நாடாளுமன்றத்துக்குத் தாம் எழுதிய கடிதத்தில் அதிபர் பைடன் கூறினார்.
அதிபர் பைடனின் ஆணை குறித்து சீனா அக்கறை தெரிவித்துள்ளது. அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தனக்கு உரிமை இருப்பதாக அது கூறியது.

