கியவ்: உக்ரேனை ஆக்கிரமித்துள்ள ரஷ்யா சனிக்கிழமை தென் உக்ரேன்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
அந்தப் பகுதியைத் தன் சொந்தப் பகுதி என்று சொல்லி ரஷ்யா அதைத் தாக்கியது. அத்தாக்குதலில் குறைந்தது ஐவர் காயம் அடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
ரஷ்ய அதிபர் புட்டினும் உக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியும் இரண்டில் ஒன்று பார்த்துவிடும்வரை போரை நிறுத்தப் போவதில்லை என்று முழங்கி இருக்கிறார்கள்.
அதற்கு அடுத்த நாளன்றே ரஷ்யா தாக்குதலை நடத்தியது.
உக்ரேனின் கிழக்குப் பகுதிகளான டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகியவற்றையும் சபோரிஸ்சியா, கெர்சன் ஆகிய தெற்குப் பகுதிகளையும் ரஷ்யா சட்டவிரோதமான முறையில் தன் பகுதிகள் என்று சொல்லி அவற்றைத் தன் எல்லையுடன் சேர்த்துக்கொண்டது.
இது நடந்து சரியாக ஓராண்டு ஆகிறது. அந்த நான்கு பகுதிகளிலும் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது.
உக்ரேனின் பகுதிகளைத் தன்னுடன் சேர்த்துக்கொணடு ஓராண்டு ஆவதைக் குறிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரஷ்ய அதிபர் புட்டின், அந்தப் பகுதிகள் ரஷ்யாவுடன் சேர்ந்து இருக்கவே விரும்புவதாகத் தெரிவித்தார்.
ஆனால் இதை உக்ரேனும் அதன் நட்பு நாடுகளும் நிராகரித்து வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
ரஷ்யாவின் இறையாண்மையையும் ஐக்கியத்தையும் நன்னெறிகளையும் பாதுகாக்க ரஷ்யப் படையினர் உக்ரேனில் போராடி வருகிறார்கள் என்று அதிபர் புட்டின் கூறினார்.
இதனிடையே, ரஷ்யப் படைகளைத் தேசிய அளவில் தொடர்ந்து எதிர்க்கப் போவதாக உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி சூளுரைத்தார்.
ரஷ்யாவை எதிர்த்து கிட்டத்தட்ட 600 நாட்களாக உக்ரேன் போராடி வருகிறது.
இருந்தாலும் கடந்த நான்கு மாத காலமாக உக்ரேனிய படைகள் திட்டவட்ட மான வெற்றியைப் பெற்றதாகத் தெரியவில்லை. முன் போர்க்களப் பகுதிகளில் மாற்றம் ஏற்பட்டதற்கான அறிகுறியும் இல்லை.
எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கையில் உக்ரேன் போர் இப்போதைக்கு முடியாது என்றுதான் தெரிகிறது.
உக்ரேன் போர் காரணமாக இரு தரப்புகளிலும் ஆயிரக்கணக்கான உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஏவுகணைத் தாக்குதல் ஒருபுறம் இருக்க, 40 ஆளில்லா வானூர்திகளையும் அனுப்பி ரஷ்யா சனிக்கிழமை தாக்கியதாக உக்ரேனின் விமானப்படை தெரிவித்தது. அவற்றில் 30 வானூர்திகளை உக்ரேன் சுட்டு வீழ்த்திவிட்டது.
ரஷ்யாவின் வானூர்தித் தாக்குதல்கள் தெற்கு உக்ரேனில் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினனர். அவற்றில் பத்துப் பேர் காயம் அடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

