பிட்டா: லீ குவான் யூவைப் போல நெஞ்சில் உரமுடன் இருப்பதே இலக்கு

பிட்டா: லீ குவான் யூவைப் போல நெஞ்சில் உரமுடன் இருப்பதே இலக்கு

2 mins read
f8555c21-e099-4e46-9696-6d7ac214c553
பிட்டா லிம்ஜாரோன்ராட் (நடுவில்). - படம்: இபிஏ
Google News Preferred Icon

பேங்காக்: தொடர்ந்து முன்னேறவும், நீடித்த நிலைத்தன்மையுடன் இருக்கவும் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவைப் போல நெஞ்சில் உரமுடன் செயல்படுவதே தனது இலக்கு என்று தாய்லாந்து அரசியல்வாதி திரு பிட்டா லிம்ஜாரோன்ராட் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் ‘மூவ் ஃபார்வர்ட்’ கட்சியின் முன்னாள் தலைவர் திரு பிட்டாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அடுத்த ஒரு மாதத்துக்குள் பறிக்கப்படக்கூடும்.

ஆனால் அதுகுறித்து அவர் கவலைப்படுவதாக இல்லை.

“அரசியல் கட்சிகளை மக்கள்தான் நிராகரிக்க வேண்டும், நீதிமன்றம் அல்ல. ஆனால் தாய்லாந்தில் எல்லாம் தலைகீழாக நடக்கிறது,” என்று தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள தமது கட்சித் தலைமையகத்தில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் அவர் தெரிவித்தார்.

தாய்லாந்தின் மக்களவையில் மொத்தம் 500 தொகுதிகள் உள்ளன. கடந்த மே மாதம் 14ஆம் தேதியன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் 43 வயது திரு பிட்டாவின் கட்சி 151 இடங்களைக் கைப்பற்றியது. மக்களவையில் ஆக அதிக இடங்கள் வென்ற கட்சி எனும் பெருமை ‘மூவ் ஃபார்வர்ட்’ கட்சியைச் சேரும்.

ஆனால் 750 தொகுதிகள் கொண்ட நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் அவரால் பிரதமராக முடியாமல் போனது.

நியமிக்கப்பட்ட செனட்டர்களே இதற்கு முக்கிய காரணமாக இருந்தனர்.

திரு பிட்டா பிரதமராகக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.

ஊடக நிறுவனத்தில் அவருக்குப் பங்கு இருப்பதாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து திரு பிட்டா இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதத்தில் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகிய திரு பிட்டா, அதன் ஆலோசகராகச் செயல்பட்டு வருகிறார்.

ஊடகம் தொடர்பான வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது என்று தாய்லாந்துத் தேர்தல் சட்டம் கூறுகிறது.

இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட ஊடகம் தற்போது செயல்பாட்டில் இல்லை என்பதே திரு பிட்டாவின் வாதம்.

இதுதொடர்பாக அடுத்த மாதம் 24ஆம் தேதியன்று தாய்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் திரு பிட்டாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும்.

தீர்ப்பு தமக்கு எதிராக இருந்தாலும் திரு பிட்டா அரசியலில் தொடர்ந்து ஈடுபடத் திட்டமிட்டுள்ளார்.

தாய்லாந்து மன்னரின் அதிகாரங்களை நீக்க ‘மூவ் ஃபார்வர்ட்’ கட்சி முயற்சி செய்வதாக அதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 25ஆம் தேதியன்று நடைபெறும்.

இதனால் ‘மூவ் ஃபார்வர்ட்’ கட்சி கலைக்கப்படக்கூடும் என்று பேசப்படுகிறது.

ஆனால் அப்படி ஏதும் நடக்காது என்கிறார் திரு பிட்டா.

இதற்கிடையே, தமது கட்சி புதிய தலைவர்களைத் தயார்ப்படுத்தி வருவதாக திரு பிட்டா கூறினார். இந்த அணுகுமுறையை சிங்கப்பூரிடமிருந்து கற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.

“மாற்றங்கள் உடனே நடந்திடாது. மாற்றத்தை ஏற்படுத்த தலைவர்கள் எப்போதும் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். போராட்டம் இல்லாவிடில் தலைவர்கள் தேவையில்லை,” என்றார் திரு பிட்டா.

குறிப்புச் சொற்கள்
தாய்லாந்து