‘உலகம் கொந்தளிப்பில் இருப்பதற்கு மேற்கத்திய நாடுகளே காரணம்’

‘உலகம் கொந்தளிப்பில் இருப்பதற்கு மேற்கத்திய நாடுகளே காரணம்’

2 mins read
59c7ced0-1f4e-48b7-b575-9121edd9b00e
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவ். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

மாஸ்கோ: உலகில் செல்வாக்கு சரிந்துவரும் மேற்கத்திய நாடுகளின் சூழ்ச்சிகளே உலகம் இன்று கொந்தளிப்பான நிலையில் இருப்பதற்கு காரணம் என்று வியாழக்கிழமை வெளியான பேட்டி ஒன்றில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளில் உள்ள எவரும் 2024ஆம் ஆண்டில் மேற்கத்திய நாடுகளின் சூழ்ச்சிகளிலிருந்து தப்பிக்க இயலாது என்று டாஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த ஆண்டிறுதி பேட்டியில் திரு லவ்ரோவ் கூறியுள்ளார்.

“உலகில் புயல்காற்று தொடர்கிறது. இதற்கு ஒரு காரணம் மேற்கத்திய நாடுகளில் ஆட்சியில் உள்ளோர் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க மக்களைப் பயன்படுத்தி, தங்கள் எல்லைகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலுள்ள பகுதிகளில் நெருக்கடியைத் தோற்றுவிக்கின்றனர்.

“மேற்கத்திய நாடுகளில் ஆதிக்கம் தங்கள் கைகளை விட்டுப் போய்விடும் என்ற சூழல் உள்ளதால், அந்நாடுகள் ஈடுபடும் புவிசார் சூழ்ச்சிகளிலிருந்து எவரையும் பாதுகாக்க முடியாது. இந்தப் புரிதல் வளர்ந்து வருகிறது, ” என்று முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ள அவரது பேட்டியின் சாராம்சம் தெரிவிக்கிறது.

உலகின் வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்டுவரும் கொந்தளிப்பு, போர் ஆகியவற்றுக்கு மேற்கத்திய நாடுகளே காரணம் என்று ரஷ்யா கூறத் தொடங்கியுள்ளது.

உக்ரேன் போர் குறித்தும் திரு லவ்ரோவ் விமர்சித்துள்ளார். வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தி, ரஷ்யாவை உத்திபூர்வமாக தோல்வியடையச் செய்து ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக தன் வாழ்வை நிலைநிறுத்தப் போராட வேண்டிய நிலைக்கு ரஷ்யா தள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், மத்திய கிழக்கு போர் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பல காலமாக தோல்வியுற்றதன் விளைவு என்றும் அவர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்
ர‌ஷ்யா

தொடர்புடைய செய்திகள்