ராணுவ கொள்முதலை நான் சரிபார்ப்பேன்; ஊழல், அதிகார வரம்புமீறல் கூடாது: மலேசிய மாமன்னர்

ராணுவ கொள்முதலை நான் சரிபார்ப்பேன்; ஊழல், அதிகார வரம்புமீறல் கூடாது: மலேசிய மாமன்னர்

2 mins read
799d93ff-0360-46f5-9c83-245af3b0437e
மலேசிய ஆயுதப் படைகளின் பயிற்சி அதிகாரிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி சுங்கை பெஸி முகாமில் சனிக்கிழமை ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெற்றது. அதில் அரச மரியாதை அணிவகுப்பைப் பார்வையிடும் மாண்புமிகு மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம். - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

கோலாலம்பூர்: ராணுவ அதிகாரிகள் ஊழல், அதிகார வரம்புமீறல் ஆகியவற்றில் ஈடுபட்டால் நாட்டின் மதிப்பு, இறையாண்மை ஆகியவை பாதிக்கப்படும் என்று மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் கூறியுள்ளார்.

மலேசிய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியான தாம், ஊழல், அதிகார வரம்புமீறல் ஆகியவற்றில் ஈடுபடும் அல்லது தனது கடமையை ஆற்றத் தவறும் எந்த ராணுவ அதிகாரியையும் தாம் சகித்துக்கொள்ளப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார்.

ஒரு ராணுவ அதிகாரிக்கு உண்மை, நம்பிக்கை ஆகியவற்றுடன் அசைக்கமுடியாத தியாக உணர்வு, நாட்டின் இறையாண்மையைக் காப்பதில் விசுவாசமாக இருப்பது ஆகியவை அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.

“ராணுவ அதிகாரி ஒருவர் ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்ற பேச்சுக்கே இடமிருக்கக்கூடாது. அதிலும் குறிப்பாக, அரசாங்க ஒப்பந்தங்கள், சாதனங்களை கொள்முதல் செய்தல் போன்றவற்றில்,” என்று மாமன்னர் கூறினார்.

மலேசியாவின் சுங்கை பெஸியில் உள்ள ராணுவ முகாமில் ராணுவப் பயிற்சி அதிகாரிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி தொடர்பிலான மரியாதை அணிவகுப்பை சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) பார்வையிட்டபோது மலேசிய மாமன்னர் மேற்கண்டவாறு கூறினார்.

ராணுவ அதிகாரிகள் எல்லா நேரங்களிலும் கட்டுப்பாடுடன் இருப்பது அவசியம், குறிப்பாக அவர்கள் ராணுவ சீருடை அணிந்திருக்கும்போது என்று மாமன்னர் வீரர்களுக்கு நினைவூட்டினார்.

“நன்னடத்தையுடன் செயல்படுங்கள், மானக்கேடான நடவடிக்கைகளில் என்றுமே ஈடுபடாதீர்கள். சமூகம் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்காதீர்கள்.

“ஓர் அதிகாரியின் கெட்ட செயலால் எல்லோருக்கும் கெட்ட பெயர் ஏற்படவிடாதீர்கள்,” என்று மாமன்னர் ராணுவ அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய மலேசிய மாமன்னர் அரசாங்கம், ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்யும்போதும் ராணுவத் தளங்களை அமைக்கும்போதும் என்றும் உண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கொள்முதல் செய்யும் பொருள்கள் உயர்ந்த தரமானதாக இருக்க வேண்டும், அவை நாட்டின் தற்காப்புக்கு அவசியமான, தேவையானவையாக இருக்க வேண்டும் என்பதை மாமன்னர் வலியுறுத்தினார்.

இதில் விற்பனையாளர்கள், தரகுத் தொகை தர முன்வருபவர்களால் ஈர்க்கப்படக்கூடாது என்றும் அவர் விளக்கினார்.

இதில், அனைத்து கொள்முதல்களையும் தானே சரிபார்க்கப்போவதாகவும் மாமன்னர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாமாமன்னர்ராணுவம்