புதிய அமைச்சரவையை அமைக்கத் தயாராகும் தாய்லாந்துப் பிரதமர்

புதிய அமைச்சரவையை அமைக்கத் தயாராகும் தாய்லாந்துப் பிரதமர்

1 mins read
dffd29ca-f1e5-467a-8422-0c74de19dd74
தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராகுல், புதிய அமைச்சரவைக்கான 35 பேர் கொண்ட பட்டியல் அரசரிடம் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகத் திங்கட்கிழமை (மார்ச் 30) கூறினார். - படம்: இபிஏ
Google News Preferred Icon

பேங்காக்: தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராகுல், புதிய அமைச்சரவையில் இடம்பெறுவோர் பட்டியலை வெளியிடத் தயாராகி வருகிறார்.

தென்கிழக்காசிய நாடுகளின் வளர்ச்சிக்கு மிரட்டலாக விளங்கும் மத்திய கிழக்கு நெருக்கடியைக் கையாள்வதற்கான கூடுதல் அதிகாரத்தைப் புதிய அமைச்சரவை அவருக்கு வழங்கும் எனக் கருதப்படுகிறது.

அமைச்சரவைக்கான 35 பேர் கொண்ட பட்டியல் அரசரின் ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகத் திங்கட்கிழமை (மார்ச் 30) திரு அனுட்டின் கூறினார்.

நியமனத்துக்கு முன்மொழியப்பட்டுள்ளோரின் பின்னணி குறித்த விவரங்களைப் பல்வேறு அமைப்புகள் சரிபார்த்ததாக அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

தாய்லாந்து மன்னர் மகா வஜ்ஜிரலோங்கோர்ன் முன்னிலையில் அமைச்சரவை உறுப்பினர்கள் பதவியேற்றவுடன் நாடாளுமன்றத்தில் கொள்கை அறிக்கை ஒன்றை வெளியிடப் பிரதமர் அனுட்டின் திட்டமிட்டுள்ளார். புதிய நிர்வாகம் அதிகாரபூர்வமாகச் செயலாற்றத் தொடங்குவதற்கான முக்கிய நடவடிக்கையாக அது அமையும்.

ஏப்ரல் 7ஆம் தேதி அந்த அறிக்கையை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளியல் ஊக்குவிப்பு, கடன் நிர்வாகத் திட்டங்களுடன் நாட்டின் போட்டித்தன்மையை அதிகரிப்பது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு ஆதரவளிப்பது போன்றவை தொடர்பான திட்டங்களும் அதில் இடம்பெற்றிருக்கும் என்று தாய்லாந்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வளைகுடாப் பிரச்சினையால் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு, விலை உயர்வு, விநியோகச் சவால்கள் போன்றவை தொடர்பில் திரு அனுட்டின் விமர்சனங்களை எதிர்கொள்கிறார். மத்திய கிழக்குப் போரால், ஏற்றுமதிகளும் சுற்றுப்பயணத் துறையும் பாதிக்கப்பட்ட நிலையில் தாய்லாந்தின் வளர்ச்சி சுருங்கும் என்று பொருளியலாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
பிரதமர்அமைச்சரவைஎரிபொருள்நெருக்கடிவளர்ச்சி