வாஷிங்டன்: அமெரிக்காவின் அடுத்த அதிபராக பொறுப்பு ஏற்கவிருக்கும் டோனல்ட் டிரம்ப், பாரிஸில் நோட்ர டேம் தேவாலய திறப்புவிழாவில் பங்கேற்றதன் மூலம் மீண்டும் உலக அரங்கிற்குத் திரும்பியுள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன்பு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் இது.
இன்னமும் பதவியேற்காத நிலையில் சாதாரண அமெரிக்க குடிமகனாக இருக்கும் திரு டிரம்ப் அனைத்துலக நெருக்கடிகளைச் சமாளிக்கத் தயாராகி வருகிறார்.
சனிக்கிழமையன்று (டிசம்பர் 7) நோட்ர டேம் தேவாலயத் திறப்புவிழா நடைபெற்றது.
ஐரோப்பாவுக்கும் ஊகிக்க முடியாத அரசியல்வாதியான டிரம்புக்கும் இடையே சமரசம் செய்து வைக்கும் வாய்ப்பை பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மெக்ரோனுக்கு இவ்விழா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு தலைவர்களும் சந்தித்துப் பேசலாம் என்று கூறப்படும் வேளையில், அது குறித்த முன்னறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
ரஷ்யப் படையெடுப்பை முறியடிக்கும் முக்கியமான கட்டத்தில் உக்ரேனுக்கு வழங்கப்பட்டு வரும் ராணுவ உதவிகளை திரு டிரம்ப் மீட்டுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதால் ஐரோப்பியத் தலைவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
நேட்டோ அணியில் சேர முற்பட்டதால் உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தது.
தொடர்புடைய செய்திகள்
நேட்டோவால் தனது நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்படலாம் என்று ரஷ்யா கருதியதே அதற்கு காரணம்.
திரு மெக்ரோன், நேட்டோ கூட்டணிக்கும் உக்ரேனுக்கும் வலுவான ஆதரவாளராக இருக்கிறார்.
அதே சமயத்தில் ஐரோப்பிய நாடுகள் தங்கள் பொதுவான பாதுகாப்பிற்காக அமெரிக்கா வழங்கும் உதவிகளுக்கு அதிக பணம் செலுத்த வேண்டும் என்றும் உக்ரேன் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் டிரம்ப் விரும்புகிறார்.
நோட்ர டேம் தேவாலயம் தீயினால் நாசமடைந்து ஐந்தரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்படும் விழாவில் முக்கிய உலகத் தலைவர்களும் வெளிநாட்டுப் பேராளர்களும் திரு டிரம்ப்புடன் பங்கேற்கின்றனர்.
மெக்ரோனைத் தவிர மற்ற தலைவர்கள் டிரம்ப்பை சந்திப்பார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது குறித்து டிரம்ப் நிர்வாகக் குழுவினர் தகவல் எதுவும் வெளியிடவில்லை.

