வாஷிங்டன்: ஈரானுடன் மிகவும் ஆக்ககரமான பேச்சு நடைபெறுவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை (மே 3) கூறியிருக்கிறார்.
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் சென்றுவர அமெரிக்கா வெகுவிரைவில் பாதுகாப்பளிக்கத் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
உலக நாடுகள் அந்த முக்கிய நீர்வழியாகப் போவதற்கு அமெரிக்காவின் உதவியை நாடியிருப்பதாகத் திரு டிரம்ப் சொன்னார்.
“ஈரான், மத்திய கிழக்கு, அமெரிக்கா ஆகியவற்றின் நலன்களைக் கருத்தில்கொண்டு, அந்த நாடுகளின் கப்பல்களுக்குப் பாதுகாப்பளிக்கப் போவதாகக் கூறியுள்ளோம். கட்டுப்படுத்தப்பட்ட நீர்வழி மூலம் அவை சிக்கலின்றிச் சென்று வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடலாம்,” என்றார் அவர்.
‘சுதந்திரம்’ என்று அழைக்கப்படும் அந்தத் திட்டம், மத்திய கிழக்கு நேரப்படி திங்கட்கிழமை காலை தொடங்கும் என்று அமெரிக்க அதிபர் குறிப்பிட்டார்.
திட்டம், மனிதநேய அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார். அந்த நீரிணைப் பகுதியில் உள்ள பெரும்பாலான கப்பல்களில் உள்ளவர்களுக்கு இருப்பில் உள்ள உணவும் மற்ற அத்தியாவசியப் பொருள்களும் குறைந்து வருகின்றன என்று திரு டிரம்ப் கூறினார்.
நிலைகுத்திப்போயிருக்கும் கப்பல்களையும் அவற்றில் உள்ள ஊழியர்களையும் அந்தப் பகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றிக் கொண்டுவர அமெரிக்கா ஆன அனைத்தையும் செய்யும் என்றார் அவர்.
இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் தலையிட அமெரிக்கா முயன்றால், அதனை மத்திய கிழக்குச் சண்டைநிறுத்த உடன்பாட்டை மீறும் செயலாய்க் கருதப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
எண்ணெய் விலை, ஈரான் போருக்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய 50 விழுக்காடு கூடியுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களின் போக்குவரத்து நிலைகுத்திப் போயிருப்பதே அதற்கு முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியதால் எண்ணெய், எரிவாயு, உரம் ஆகியவற்றின் நீர்வழிப் போக்குவரத்தில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்குப் பதிலடியாக அமெரிக்கா ஈரானியத் துறைமுகங்களுக்கு எதிராகத் தடைகளை விதித்துள்ளது.

