மின்சிகரெட் புழக்கம் எந்த நிலையிலும் கூடாது என்போம்

மின்சிகரெட் புழக்கம் எந்த நிலையிலும் கூடாது என்போம்

2 mins read
fca0f4bb-72ff-4339-9b9e-768255a1123a
மின்சிகரெட் புழக்கம் பற்றி ‘பிரஸ்பெட்டேரியன் ஹை’ பள்ளியில் நடத்தப்பட்ட நாடகத்தில் பங்கேற்ற மாணவர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

மாணவர்களிடையே மின்சிகரெட் புழக்கம், கவலைக்குரிய பிரச்சினையாக உருவெடுத்த நிலையில் அதற்கு எதிரான ஆகக் கடுமையான சட்ட நடவடிக்கை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்டுள்ளது.

தீரா மன அழுத்தமும் தீய நண்பர்களின் தூண்டுதலும் முயன்று பார்ப்போமே என்ற விவேகமற்ற துணிச்சலும் இந்தத் தீய பழக்கத்திற்கு வித்திடும் பொதுவான காரணங்கள்.

கல்வியமைச்சு இவ்வாண்டு ஆகஸ்ட்டில் வெளியிட்ட தகவல்களின்படி, 2022ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை சராசரியாக ஆண்டுக்கு 3,100 மாணவர்கள் மின்சிகரெட் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

மின்சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் எனும் மயக்கபொருள், புழங்கிகளை அடிமையாக்கும் தன்மை கொண்டது.

மின்சிகரெட்டுகளின் தீமையைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்கள் முதல் அரசாங்கம் வரை தங்களால் ஆன முயற்சிகள் அனைத்தையும் எடுத்து வருகின்றனர்.

எண்ணங்களைச் சீர்ப்படுத்துவதே தீர்வு

மின்சிகரெட்டுகளின் தீமையைப் பற்றி இளையர்களே பிற இளையர்களுக்கு எடுத்துரைப்பது நல்லது என்று ‘செண்டர் ஃபார் சைக்காலஜி’ அமைப்பின் நிறுவனரும் மனநல ஆலோசகருமான திரு கோபால் மஹே தெரிவித்தார்.

“இதுபற்றி மாணவர்களே தங்களுக்குள் வெளிப்படையாகக் கலந்துரையாடலாம். உணர்வுகளை எப்படி இதப்படுத்தி விவேகத்துடன் செயல்படுவது என்பது குறித்து ஆராயலாம். ஆசிரியர்கள், பெரியவர்கள், மனநல ஆலோசகர்கள் ஆகியோர் வழிகாட்டுவது முக்கியம்,” என்று அவர் கூறினார்.

விளையாட்டு, கைவினைக் கலை, இசை உள்ளிட்ட ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். அத்துடன் ஆலோசகர் அல்லது நம்பகமான பெரியவர் ஒருவரிடம் பேசுவதும் உதவும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உதவ பெரியவர்கள் தயார்

பெற்றோர்களின் அணுகுமுறை சில நேரங்களில் கடுமையாக இருந்தாலும் பிள்ளைகளின் நலனைக் கருதியே அவ்வாறு நடந்துகொள்வதாகக் கூறுகின்றனர்.

“ நாளைய சமுதாயம் இன்றைய இளையர்கள் கையில் இருப்பதாக நான் என் பிள்ளைகளிடம் அடிக்கடி கூறுவேன். நாம் வருங்காலத்தில் முன்னேறுகிறோமா இல்லையா என்பது நமது முடிவில் உள்ளது,” என்று இரண்டு பிள்ளைகளுக்கு பெற்றோரான 42 வயது பொறியாளர் தனசேகரன் கீதா தெரிவித்தார்.

இன்றைய புகை, நாளைய பேரிழப்பு. நொடிகளில் மறையும் புகைக்காக எதிர்காலத்தைப் பணயம் வைப்பது நியாயமில்லை.

குறிப்புச் சொற்கள்
மின்சிகரெட்மயக்கம்போதைப் பொருள்மாணவர்கள்