உணவுப் பிரியர்களின் சமையல் பயணம்

வெவ்வேறு பாதைகளில் சென்று கொண்டிருந்த இளையர்கள் சந்தித்துப் பழக, ஒரு புதிய தொழிலைத் தொடங்கலாம் என்ற சிந்தனை எழுந்தது.

இளையரான திரு இலைஜா இதற்கு முன்பு விளம்பரத் துறையில் இருந்தவர், குமாரி ஆ.தனேஸ்வரி திருமண விழாக்கள் ஏற்பாட்டுப் பணிகளைச் செய்து வந்தார்.

சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, நண்பர் ஒருவரின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய உதவியபோது இருவருக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது.

அங்கிருந்து நட்பு மலர, இருவருக்குமே பல விஷயங்கள் ஒத்துப்போனது, குறிப்பாக உணவு என்றால் இவர்களுக்கு கொள்ளைப் பிரியம்.

அதன் தொடர்பான காணொளிகளை ஒன்றாகப் பார்த்து அவ்வப்போது கருத்துகளும் அவர்கள் பரிமாறிக்கொள்வர்.

இலைஜா பல உள்ளூர் உணவக சமையல் அறைகளில் வேலை செய்த அனுபவம் கொண்டவர், குமாரி தனேஸ்வரி ‘பேகிங்’கில் அதிக நாட்டம் கொண்டவர்.

தங்களது முழு நேரப் பணியில், திருப்தி கிடைக்காத பட்சத்தில் ஒன்றுசேர்ந்து செயல்படலாமே என்ற எண்ணம் அவர்களிடையே முளைத்தது.

ஆரம்பத்தில், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் தொழிலை தொடங்கலாம் என்று எண்ணினர்.

ஏனெனில் இருவருக்குமே அதில் அனுபவம் உள்ளது.

அலுவலகம் தொடர்பான வேலைகளை விரும்பாத பட்சத்தில் இருவரும் தங்களது பணிகளிலிருந்து விலகி, இருக்கும் சேமிப்புகளைக்கொண்டு உணவுத் துறையில் கால் பதிக்கலாம் என தைரியமாக முடிவுசெய்தனர்.

முதல் முயற்சியாக, மரினா பே கேளிக்கை சந்தையில் உணவுக் கடையை அவர்கள் திறந்தனர்.

அங்கு மேற்கத்திய உணவு வகைகளை அவர்கள் விற்கத் தொடங்கினர்.

இது அவர்களுக்கு ஒரு நல்ல ஆரம்பமாக அமைந்தது. ஆனால் நோன்புப் பெருநாளுக்கான கேலாங் சிராய் சந்தையில் புதுவித உணவு வகையை விற்பனை செய்தபோது, அவர்களுக்கு நட்டம் ஏற்பட்டது.

அங்கு வந்த வாடிக்கையாளர்களிடையே தங்களது ‘டாக்–கோஸ்’ (tacos) உணவு வகைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.

இருப்பினும், அவர்கள் மனம் தளராது, தெரிந்தவர்கள் மூலமாக தனியார் நிகழ்ச்சிகளுக்கு உணவு சமைத்து விநியோகம் செய்யும் தொழிலில் சிறிது காலம் ஈடுபட்டனர்.

முதலில் பல்வகை மேற்கத்திய, உள்ளூர் உணவு வகைகளை இவர்கள் சமைத்து வந்தனர். 

பிறகு ஒரு தனித்துவ அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று இந்திய உணவையும் மெக்சிகோ உணவையும் எப்படி கலந்து புதிய உணவு வகைகளை தயாரிக்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றியது.

கடந்தாண்டு மத்திய வர்த்தக வட்டாரத்தில் இயங்கும் மதுபானக் கூடத்தில் உணவு தயாரிக்க இவர்களுக்கு அழைப்பிதழ் வந்தது.

இதுதான் தங்களது தனித்துவ அடையாளத்தை மேன்மேலும் வளர்க்க நல்ல சந்தரப்பம் என்று உணர்ந்து களத்தில் இறங்கினர்.

‘டாக்கோ மந்த்ரா’ எனும் பெயரில் இந்திய, மேற்கத்திய, மெக்சிக்கோ உணவு வகைகளைக் கலந்து தங்களது பாணியில் புதுவித உணவு வகைகளை இருவரும் தயாரித்து வருகின்றனர்.

‘சம்பால்’ காடை முட்டையுடன் உருளைக்கிழங்கு பொரியல் (fries), ‘பட்டர்’ கோழி ‘பர்கர்’ (burger), இந்திய தாளிப்புப் பொருட்களுடன் கூடிய செம்மறி ஆட்டிறைச்சி ‘பர்கர்’, அப்பளம் ‘நாச்சோஸ்’ (nachos) என கலவையான உணவு வகைகள் அங்குள்ள உணவுப் பட்டியலில் இடம்பெறுகிறது.

இதில் இருவரின் கைவண்ணமும் அடங்கியுள்ளது.

உதாரணத்திற்கு, வெவ்வேறு தனித்துவ உணவு வகைகளின் சுவைகளைக் கலப்பதில் திரு இலைஜா கவனம் செலுத்துவார், அவருடன் சமையல் அறையில் பணியாற்றும் குமாரி தனேஸ்வரி உணவு வகைகளை எவ்வாறு சிறந்த முறையில் தட்டில் பரிமாறலாம் என்பதை பார்த்துக்கொள்வார்.

உணவு வகைகளை சமூக ஊடகங்கள் வழி விளம்பரப்படுத்தும் பணியை திரு இலைஜா பார்க்க, அவ்வப்போது புதுவித உணவு வகைகளை இருவரும் செய்து பார்ப்பர்.

"தற்போது நிர்ந்தரமாக இங்கு செயல்பட்டாலும் மற்ற மதுபானக்கூடங்கள் எங்களை சமைக்க அழைத்தால் அங்கும் சென்று எங்களது சேவையை வழங்குவோம்.
“பிடித்தவற்றை செய்வதால் வேலைப் பளுவை நாங்கள் பெரிதும் பொருட்படுத்துவதில்லை,’’ என்று கூறினார் வாரத்தில் ஆறு நாட்கள் பணியாற்றும் குமாரி தனேஸ்வரி, 32.

“இதற்கு முன்பு நாங்கள் செய்த வேலை எங்களுக்கு கூடுதல் வருமானத்தைத் தந்தது. ஆனால் மனதளவில் திருப்தி இல்லை.

அதிக நேரம் வேலை செய்தாலும், விருப்பமான தொழிலில் ஈடுபடுவது குறித்து மகிழ்ச்சி அடைகி–றோம்,” என்று கூறினார் திரு இலைஜா, 32.

புதிய தொழிலில் இறங்கும்போது ஆழம் அறியாமல் காலைவிட வேண்டாம் என்று மற்ற இளையர்களுக்கு இவ்விருவரும் அறிவுரை கூறுகின்றனர்.

தொழில் ரீதியிலான இன்னல்களைச் சந்திக்கும்போது மனம் துவண்டுவிடாமல் அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தொடர்ந்து செயல்படுங்கள் என்று அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.