‘என்ட ஒரு கதை இருக்கு’: போட்டி வரை சென்ற ஓர் இளைஞரின் குறும்பட ஆர்வம்

தம் குறும்படத்தைத் திரைப்பட விழாவுக்குச் சமர்ப்பிக்க ஆசை. ஆனால் கடைசி நிமிடத்தில் உதவ முடியாது என்று தேர்ந்தெடுத்த கதாசிரியர் கூறிவிட்டார். இதனால் விரக்தி அடைகிறார் அந்த இயக்குநர் கதாபாத்திரம். 

கைபேசியில் இயக்குநர் பேசிக்கொண்டிருந்ததை வீட்டு வாசலிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த பீட்ஸா விநியோக ஊழியர் ஒருவர், ‘தம்மிடம் ஒரு கதை உள்ளது’ என உணவு ரசீதில் எழுதிவிடுகிறார்.

ரசீதை உன்னிப்பாக கவனித்த இயக்குநர் வீட்டிலிருந்து புறப்பட்ட அந்த பீட்ஸா விநியோகிப்பாளரை உடனே அழைத்துக் கதை சொல்லும் வாய்ப்பைத் தருகிறார்.

இருவரும் சேர்ந்து குறும்படத்தைத் தயாரிக்க இணைகின்றனர். 

‘என்ட ஒரு கதை இருக்கு’ என்ற வித்தியாசமான தலைப்பில் இந்த மூன்று நிமிடக் கதையை ஒரு குறும்படமாக எடுத்த இளையர் அன்பழகன் அருண் முகிலன், அதை ‘சினி65’ (ciNE65) திரைப்பட விழா போட்டிக்கு அனுப்பினார்.

கடந்த மாதம் ‘நெக்சஸ்’ (தற்காப்பு அமைச்சு), ‘எம்எம்2’ (MM2) என்ற ஊடக கேளிக்கை நிறுவனம் இணைந்து நடத்திய இப்போட்டியில் சிறந்த ‘கலை இயக்கம்’ (Art Direction) விருதுப் பிரிவுக்கு, இந்தத் தமிழ் குறும்படம் முன்மொழியப்பட்டது. 

சிங்கப்பூரர் என்ற உணர்வையும் கடப்பாட்டையும் வலுப்படுத்துவதுடன் வளர்ந்துவரும் உள்ளூர் இயக்குநர்களுக்குத் தளம் அமைத்துக் கொடுப்பதையும் இவ்விருது விழா நோக்கமாகக் கொண்டுள்ளது.

தன் வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்தக் குறும்படத்தை இளையர் அருண் முகிலன் சுமார் ஐந்து நாட்களில் முடித்தார். ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் ஊடகத் தாயாரிப்பு, வடிவமைப்பு துறையில் பயின்ற 20 வயது அருண் முகிலன், சிறு வயதிலிருந்தே ‘எனிமே‌‌ஷன்’, ‘சூப்பர்ஹீரோ’ படங்களை பார்த்து பரவசமடைந்தவர். 

உயர்நிலைப் பள்ளிப் பருவத்திலிருந்தே குறும்படம் எடுக்க தொடங்கிய இவர், அதற்குரிய ‘பிரிமியர் புரோ’ மென்பொருளை அப்போதே கற்றுக்கொண்டார். 

ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்கு முன், ‘டாஸ்க் ஸ்டூடியோஸ்’ என்ற ‘யூடியூப் சேனலை’த் தொடங்கி, தன்னுடன் படித்த பெண்டமியர் உயர்நிலைப் பள்ளி நண்பர்களை நடிகர்களாக ஈடுபடுத்திக் குறும்படங்கள் இயக்கி வந்தார். 

வெவ்வேறு உயர்கல்வி நிலையங்களில் அவரின் நண்பர்கள் தற்போது படித்துக்கொண்டிருந்தாலும் தொடர்ந்து குறும்படங்களுக்கு அவர்கள் ஆதரவு நல்கி வருகின்றனர்.

“போட்டிக்கு ‘ஒன்றாக இருந்தால் வலுவடைவோம்’ என்ற கருப்பொருளில் குறும்படம் தயாரிக்க வேண்டும். அறிமுகமில்லாதவர்கள் ஒன்றுசேர்ந்தால் அதிலிருந்து நன்மைகள் விளையும் என்பதை என் குறும்படம் வழி காட்டினேன்,” என்று தெரிவித்தார் தற்போது தேசிய சேவை புரியும் அருண் முகிலன்.

மாறுபட்ட கதை வடிவத்திற்கு பெயர்போன ‘பீட்ஸா’ திரைப்பட புகழ் கார்த்திக் சுப்புராஜ் போன்ற தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் தமக்கு முன்மாதிரி என்று தெரிவித்த அருண் முகிலன், எதிர்காலத்தில் தமிழ்த் திரைப்பட உலகில் கால்பதிக்க வேண்டும் என்ற கனவு கொண்டுள்ளார்.

அக்கனவு மெய்ப்பட தொடர்ந்து தன் யூடியூப் சேனலில் குறும்படங்களைப் பதிவேற்றம் செய்து வருகிறார் அருண் முகிலன்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!