சிறந்த சேவையாளருக்கு வானமே எல்லை

சிறந்த பேச்சாற்றல் உடைய சு.வித்யபாரதியிடம் திறமைக்கு ஏற்ற வேலையை தேடுமாறு இவரது தாயார் அடிக்கடி அறிவுறுத்துவார்.

தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியிலும் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்திலும் சுற்றுலாத் துறையில் மேற்படிப்பை முடித்துவிட்டு, ஓராண்டுகாலம் விளம்பரப் பணியில் ஈடுபட்டார் வித்யபாரதி.

ஆனால் அந்த வேலை இவருக்குப் பிடிக்கவில்லை.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானச் சிப்பந்தியாக பணியாற்றும் தமது உறவினரைப்போல தாமும் சேவைத் துறையில் சேர வேண்டும் என்ற ஆசை இவருக்கு ஏற்பட்டது.

கடந்த 2018ஆம் ஆண்டில் மரினா பே சேண்ட்ஸ் நட்சத்திர ஹோட்டலில் வாடிக்கையாளர் சேவை அதிகாரியாக இவர் பணியில் சேர்ந்தார்.

“இத்துறையில் சேர்ந்தபோது பழைய வேலையைக் காட்டிலும் சம்பளம் சற்று குறைவாக இருந்தாலும் புதிய வேலை அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்,” என்று தெரிவித்தார் திருமதி வித்யபாரதி, 27.

ஹோட்டலுக்கு வந்துபோகும் வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பதிவுசெய்வதும் அவர்களுக்கு தேவையான உதவி புரிவதற்கு வழிகாட்டுவதும் இவரது பணிகளில் அடங்கும்.

பணியில் இவர் காட்டிய பேரார்வத்தின் விளைவாக ஓராண்டிலேயே இவருக்கு பதவி உயர்வும் கிடைத்தது.

ஹோட்டலுக்கு வரும் விருந்தினர்களுக்கு தலைசிறந்த சேவையைத் தாம் வழங்க வேண்டும் என்பதில் வித்யபாரதிக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.

ஒருமுறை ஹோட்டலில் தங்க வந்த ஐரோப்பாவைச் சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதியினர், கடவுச்சீட்டுகள் தங்களிடம் இல்லை என்பதை அறிந்து பதறிவிட்டனர்.

நிலைமையைப் புரிந்து அவர்களை முதலில் ஹோட்டலின் ஓய்விடத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு குளிர்பானம் வழங்கி, மனதை அமைதிப்படுத்த உதவினார் வித்யபாரதி. 

அதன் பிறகு அவர்கள் இதுவரை சென்ற இடங்களின் விவரங்களை வித்யபாரதி கேட்டறிந்தார். மரினா பே சேண்ட்ஸ் ஹோட்டலுக்கு வருவதற்கு முன் அந்தத் தம்பதி அருகிலிருந்த மற்றொரு ஹோட்டலில் தங்கியிருந்த விவரம் கிடைத்ததைத் தொடர்ந்து அந்த ஹோட்டலை வித்யபாரதி தொலைபேசி வழி தொடர்புகொண்டார். 

அந்தத் தம்பதியின் கடவுச்சீட்டுகள் அந்த ஹோட்டலின் பாதுகாப்பு பெட்டகத்தில்தான் உள்ளன என்பது தெரியவந்தவுடன் முதலில் அவர்களுக்கு ஹோட்டலில் அறை ஒன்றை ஒதுக்க வித்யபாரதி ஏற்பாடு செய்தார். 

அதன் பிறகு அந்த ஹோட்டலுக்கு இவர் சென்று, அத்தம்பதியின் சார்பில் அவர்களது கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு வந்து நேரடியாக ஹோட்டல் அறையில் அவர்களிடம் ஒப்படைத்தார். 

மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையை வெளிக்காட்டியதோடு தங்களது பிரச்சினையைப் பக்குவமாக தீர்த்துவைத்த வித்யபாரதிக்கு அத்தம்பதி பாராட்டு மழை பொழிந்தனர்.

தலைசிறந்த சேவையை வழங்கும் வித்யபாரதியை ‘சிங்கப்பூரின் சிறந்த வரவேற்பாளர்’ விருதுக்கு மரினா பே சேண்ட்ஸ் ஹோட்டல் முன்மொழிந்தது.

இந்த விருதுக்கு முன்மொழியப்பட்ட 33 பேரை முந்தி 2020ஆம் ஆண்டின் சிறந்த வரவேற்பாளர் விருதை அண்மையில் வென்ற வித்யபாரதி, அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ‘டேவிட் கேம்பல் கோப்பை’ எனும் உலகளாவிய சிறந்த வரவேற்பாளர் போட்டிக்கு தம்மை தயார்ப்படுத்தி வருகிறார்.

ஹோட்டலில் புதிதாகச் சேரும் ஊழியர்களுக்குப் பயிற்சி வழங்கி வரும் இவர், எதிர்காலத்தில் நிர்வாகப் பதவிக்கு உயர்வதை இலக்காகக் கொண்டுள்ளார்.

கடின உழைப்பும் செய்யும் வேலையைச் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற உத்வேகமும் இவரது பணிக்கு உதவி வருகின்றன.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!