புகுமுக மாணவர்களைச் சிந்திக்க வைத்த கருத்தரங்கு

- ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன் -

"வரும் ஆண்டுகளில் கல்வி முறை மிகவும் வேறுபட்டு அமையும். வாழ்நாள் கற்றலே இயல்பாக இருக்கும். இதற்கு நாம் எந்த அளவிற்குத் தயாராக இருக்கிறோம்?” என்று கேட்டு இளையர்களின் சிந்தனையைத் தூண்டினார் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான திரு ஹெங் சுவீ கியட். சென்ற மாதம் 6ஆம் தேதியன்று அதிகாரபூர்வமாகத் தொடங்கிய பல்கலைக்கழகப் புகுமுக மாணவர்களுக்கான கருத்தரங்கின் திறப்பு விழாவில் அமைச்சர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இவ்வாறு பேசினார். 

“சிங்கப்பூர் 4.0: அடுத்து என்ன?” என்ற கருப்பொருளை மையமாகக்கொண்ட இக்கருத்தரங்கு சிங்கப்பூர் எதிர்நோக்கக்கூடிய சவால்களைப் பற்றி சிந்திக்கவும் அவற்றுக்குத் தீர்வுகள் காணவும் புகுமுக மாணவர்களை ஊக்குவித்தது.

கடந்த 50 ஆண்டுகளாக நடந்து வரும் இக்கருத்தரங்கு, 8ஆம் தேதிவரை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. 30 பல்கலைக்கழகப் புகுமுகக் கல்வி நிலையங்களிலிருந்து 540 மாணவர்கள் இவ்வாண்டின் கருத்தரங்கில் பங்கெடுத்தனர். “நான் மாணவர்களைச் சந்திக்கும்போது இந்தக் கேள்வியைக் கேட்பேன். ‘இயந்திரங்களைத் தயாரித்து, உருவாக்குபவராக இருக்க விரும்புகிறீர்களா, இல்லை இயந்திரங்களுக்கு உங்கள் வேலையை விட்டுக்கொடுக்க விரும்புகிறீர்களா?’ நம் கல்விமுறையை மறுஆய்வு செய்யும் வகையில் பல பிரச்சினைகளைப் பற்றி சிந்திக்க நான் எழுப்பும் கேள்வி தூண்டவேண்டும்.

கருத்தரங்கின் பங்கேற்பாளர்கள் எதிர்காலப் பொருளாதார நிலை, சிங்கப்பூரின் உணவு, தண்ணீர் மற்றும் எரிசக்தியை நிர்வகிக்கும் நிலை, நம் தேசிய அடையாளத்தை வலுப்படுத்துதல் போன்ற தேசிய பிரச்சினைகளைப் பற்றி அவர்களுடைய குழுவினருடன் இணைந்து கலந்துரையாடினர். பின்னர், பங்கேற்பாளர்கள் பிரச்சினைகளைச் சமாளிக்கக்கூடிய ஆலோசனைகளை ஒரு கண்காட்சியின் மூலம் படைத்தனர். 

“நம் சமுதாயம் தொழில்நுட்பத்தால் எவ்வாறு மாற்றம் காணும், தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்கள் எவ்வாறு மனித உழைப்பின் இடத்தை எடுத்துக்கொள்வதைவிட எவ்வாறு உதவலாம் என்பது குறித்து நாம் யோசிக்கவேண்டும்,” என்றார் அமைச்சர் ஹெங். 

லக்‌‌ஷ்மண்
ஏட்டுக்கல்வி முக்கியம் என்றாலும் அது எப்போதும் நம் வாழ்க்கையோடு தொடர்புடையதாக இருக் காது. அதனால், நம் தொழில் பாதையில் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். லக்‌‌ஷ்மண், 18

“வேறுபட்ட வாழ்க்கை பாதைகளைக் கடந்து வந்த இளையர்களுடன் பழகி, அவர்களுடன் சேர்ந்து ஒரே இலக்கை நோக்கி உழைக்க இது ஒரு சிறந்த தளமாக அமையும் என்று நான் நினைக்கிறேன்,” என்று கூறினார் 17 வயது சம்யுக்தா. அவர் தற்போது என்யுஎஸ் உயர்நிலைப் பள்ளியில் (கணிதம், அறிவியல்) ஐந்தாம் ஆண்டில் படிக்கிறார்.

“இக்கருத்தரங்கிற்கு முன் வாழ்நாள் கற்றல் என்றால், ஸ்கில்ஸ்ஃப்யூச்சர் திட்டம் பற்றி மட்டுமே அறிந்திருந்தேன். ஆனால், இக்கருத்தரங்கின் மூலம் வாழ்நாள் கற்றலில் பல பாதைகள் உள்ளன என்று தெரிந்துகொண்டேன். குறிப்பாக, ஒரு தொழில் பாதையிலிருந்து மற்றொரு பாதைக்கு மாறுவதற்கு பல வழிகள் உள்ளன என்று தெரிந்துகொண்டேன்,” என்று கூறினார் விக்டோரியா தொடக்கக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் பயிலும் 18 வயது செ. லக்‌‌ஷ்மண்கிரி.

“இந்தக் கருத்தரங்கிலிருந்து நான் பலவற்றைக் கற்றுகொண்டேன். சிங்கப்பூரின் தற்போதைய நிலையை அறிந்து, அதைப் பற்றி சிங்கப்பூர் அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுக்கிறது, எவ்வாறு தொழில்நுட்பம் மூலம் நம் பிரச்சினைகளுக்குச் சிறந்த தீர்வுகளைக் காணலாம் என்று நான் கற்றுக்கொண்டேன்,” என்று கருத்தரங்கிற்குப் பிறகு கூறினார் சம்யுக்தா. அவருடைய குழுவினருடன் சேர்ந்து சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை பற்றி ஆராய்ந்திருந்தார்.