தலைமைத்துவத் தேடலில் இளையர்கள் 

ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்

பங்கேற்பாளர்கள் மட்டும் பயன் அடையாமல் ஏற்பாட்டுக் குழுவினரும் தலைமைத்துவ பண்பின் முக்கியத்துவத்தை உணரச் செய்தது சிண்டாவின் இளம் தலைவர்களுக்கான கருத்தரங்கு.தலைமைத்துவ பண்பைக் கற்றுக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்ட சில முகாம்கள், ஒரு சிறந்த தலைவர் ஆவதற்கான ரகசியத்தைச் சொல்லிக் கொடுத்தது எனக் கூறலாம். ஆனால் நாட்டுக்கும் சமூகத்திற்கும் பங்காற்றும் வகையில் இளையர்கள் எவ்வாறு தலைவர்களாக இயங்கலாம் என்ற ஒரு மாறுபட்ட அனுபவத்தை அளித்தது இந்நிகழ்வு.

சுயமாகச் சிந்தித்து முடிவெடுப்பது, நடவடிக்கைகள் மூலம் அனுபவபூர்வமாக கற்றுக்கொள்வது போன்றவற்றை அறிந்திடும் சூழலைக் கருத்தரங்கு அமைத்து கொடுத்ததாக ஏற்பாட்டுக் குழுவின் 19 வயது மிருதுளா குமார் கூறினார்.

இக்கருத்தரங்கு சிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாட்டில் சென்ற மாதம் 7ஆம் தேதியிலிருந்து 9ஆம் தேதிவரை நடைபெற்றது. இளையர் பிரிவைச் சேர்ந்த தொண்டூழியர்களின் ஐந்து மாத உழைப்பில் 2011ஆம் ஆண்டிலிருந்து இக்கருத்தரங்கு ஒரு வருடாந்தர நிகழ்வாக நடத்தப்படுகிறது. இவ்வாண்டின் கருத்தரங்குக்கு தொடக்கக்கல்லூரிகள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் போன்ற வெவ்வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த 83 மாணவர்கள் வந்திருந்தனர்.

தங்களின் கல்விப் பாதையிலிருந்து வேறுபட்ட பாதையில் செல்கின்றவர்களைச் சந்தித்து அவர்களுடன் பழகி உரையாடக் கருத்தரங்கு தளம் அமைத்துக் கொடுத்தது.

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தலைவரைக் கண்டறிவதைக் கருப்பொருளாகக் கொண்டிருந்தது கருத்தரங்கு. இளையர்கள் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு ஊக்கத்துடன் செயல்பட்டால் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் சிறந்த தலைவர்களாக மாற முடியும் என்ற நம்பிக்கையில் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கருத்தரங்கின் மூலம் ஒவ்வோர் இளைஞரும் தனது பலம், பலவீனத்தை உணர்ந்து தன்னைப் பற்றி அறிந்துகொள்ளும் ஒரு பயணத்தை மேற்கொள்ள ஊக்குவிக்கப்பட்டனர்.

பிறகு, தாங்கள் கற்றுக் கொண்டு, சமுதாயத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களுக்கு ஏற்ப தீர்வுகளை உருவாக்கினர்.

வெவ்வேறு துறைகளில் சாதித்துள்ள இளையர்கள் தங்களுடைய அனுபவங்களைக் கருத்தரங்கில் பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்துகொண்டனர். கேள்விகள் கேட்கும் வாய்ப்பும் பங்கேற்பாளர்களுக்குக் கிடைத்தது.

இந்த அங்கம் “நம்மால் முடியுமா?” என்பதை மையமாகக் கொண்டிருந்தது. தங்களால் சமூகத்திற்கு எவ்வாறு பங்காற்ற முடியும் என்பதைப் பங்கேற்பாளர்களை இந்த அங்கம் சிந்திக்க வைத்தது.

இக்கருத்தரங்கின் மற்றொரு முக்கியமான பகுதியாக “புத்தாக்கத்திற்குச் சவால்” என்ற நடவடிக்கை நடைபெற்றது. ‘ஆக்‌‌ஷன் ஃபார் எய்ட்ஸ்’, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, ‘மைண்ட்ஸ்’ போன்ற நிறுவனங்களுடனும் குறைந்த வருமான இல்லங்களுடனும் சிண்டாவின் ஏற்பாட்டுக் குழு இணைந்து இந்த அங்கத்தை நடத்தியது.

சமூகத்தின் பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வைப் பங்கேற்பாளர்களிடையே இது ஏற்படுத்தியது. “தலைமைத்துவத் தேடலில் ஒரு வழிகாட்டியாக இந்தக் கருத்தரங்கு அமையவேண்டும். அதனால் இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்யும்போதே ஒவ்வோர் அங்கமும் இந்த இலக்கை அடையவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு திட்டமிட்டோம்.

“முக்கியமாக இக்கருத்தரங்கில் பங்கேற்கும் அனைவரும் அவர்களுடைய தலைமைத்துவத் திறனைப் பற்றி அறிந்துகொள்ளும் பயணத்தை ரசிக்கவேண்டும். தங்களுக்குச் சமூகத்தில் ஒரு சிறந்த மாற்றத்தைக் கொண்டு வருவதில் முக்கியமான பங்கு இருக்கிறது என்று நம்பவேண்டும். இதுவே எங்களின் நோக்கம்,” என்று கருத்தரங்கின் தலைவர்களான 28 வயது திரு ஜீவா கோபால்கிரு‌ஷ்ணன் மற்றும் 25 வயது குமாரி நித்யா தேவி ஆகிய இருவரும் கூறினார்கள்.

கருத்தரங்கின் இறுதி நாளன்று பங்கேற்பாளர்கள் தலைமைத்துவத்தைப் பற்றிய தங்களது சிந்தனைகளையும் சமூகப் பிரச்சினைகளுக்காக அவர்கள் யோசித்த தீர்வுகளையும் படைத்தனர்.

தற்போது “ஸ்ட்ரடீஜிக் மூவ்ஸ்” என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் சிண்டாவின் அறங்காவலருமான திரு வி‌ஸ்வா சதாசிவனின் முன்னிலையில் படைத்தனர்.

இக்கருந்தரங்கின் மூலம் பங்கேற்பாளர்களுக்குச் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் கிடைத்த விழிப்புணர்வு அவர்களுக்கு ஒரு புதுமையான பாடமாக இருந்தது. மேலும், சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இளையர்கள் ஆற்றவேண்டிய பங்கை வலியுறுத்தியது.

“மொத்தத்தில் இந்த அனுபவம் என்னைப் பற்றி நானே அறிந்துகொள்ள வாய்ப்பளித்தது. எனக்குள் இருக்கும் தலைவனை வெளிப்படுத்தவும் எனக்கு உதவியுள்ளது. தலைமைத்துவப் பண்புடன் செயல்படுவது வாழ்நாள் முழுவதும் தொடரவேண்டிய ஒரு பயணம். சிறந்த தலைவர்கள் மற்றவர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்காக சேவையாற்ற செயல்படுவார்கள் என்று நான் கற்றுக்கொண்டேன்,” என்றார் ஆங்கிலோ சீன தன்னாட்சிப் பள்ளியில் ஐந்தாம் ஆண்டில் படிக்கும் 17 வயது ரவிச்சந்திரன் ‌ஸ்ரீவத்சவ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!