சுடச் சுடச் செய்திகள்

குறும்பட உலகில் இயக்குநராக கால்பதிக்கும் பவித்திரன்

மலாய் மொழி தெரியாது. ஆனாலும் அம்மொழி தெரிந்தவருடன் இணைந்து ஒரு கதையை உருவாக்கி அதற்குக் குறும்பட வடிவமும் தந்துள்ளார் இளையர் பவித்திரன் நாதன், 27 .  அவர் கைவண்ணத்தில் உருவாகிய அக்குறும்படத்தின் பெயர் ‘ஃபாரா’.  ஐந்தாவது முறையாக இவ்வாண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய இளையர் திரைப்பட விருதுக்கு (National Youth Film Awards) இப்படம் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

விருதுக்கு 15 முதல் 35 வயது வரையிலான இளையர்கள் தங்கள் குறும்படங்களை இவ்வாண்டு மே மாதம் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பித்திருந்தனர். பொதுப்பிரிவு, ஊடகத் துறை சார்ந்த மாணவர்ப் பிரிவு என இரு பிரிவுகளாக நடத்தப்படும் இவ்விருதுக்கு, இளையர்கள் தாங்கள் இயக்கிய படங்களை அனுப்பியிருந்தனர்.  இரு பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 446 விண்ணப்பங்கள் கிடைத்தன.

இவற்றில் ஊடகத் துறை சார்ந்த மாணவர்கள் சமர்ப்பித்தவை 300க்கும் மேற்பட்டவை. விருது பெறத் தேர்வு செய்யப்பட்ட 38 குறும்படங்களில் ஒன்றாக ‘ஃபாரா’ தகுதி பெற்றது பெருமைக்குரிய ஒன்றாகக் கருதுகிறார் இளையர் பவித்திரன்.

பெருநாள் சமயத்தில் ஒரு மலாய் குடும்பத்தில் ஏற்படும் சூழலை ‘ஃபாரா’ காட்சிப்படுத்துவதாக ‘லாசா’ கலைப்பள்ளியில் திரைப்படத்துறை பயிலும் இறுதியாண்டு மாணவரான பவித்திரன் பகிர்ந்துகொண்டார். தையல் வேலை செய்யும் ஒருவர், தம் வாழ்க்கையில் ஏற்படும் சில விநோதமான சம்பவங்களுக்கு இடையே முதுமையடைகிறார். தம்முடைய மகளுடன் இருக்கும் உறவு இதனால் பாதிக்கப்படுகிறது. 

மூதாட்டி எப்படி அந்த உறவைச் சீர்செய்ய முயற்சி செய்கிறார் என்பது பற்றி குறும்படத்தில் காட்டப்பட்டுள்ளது. அத்துடன் மனநோய் தொடர்பான சில அம்சங்களும் இப்படத்தில் இடம்பெறுகின்றன.  “மனநோய்களில் ஒருவகை ‘எக்சிஸ்டென்ஷல் சிண்ட்ரம்’ (existential syndrome). வாழ்க்கையை முற்றிலும் அனுபவித்துவிட்டதாக நினைத்து மரணத்தை நாடும் விருப்பம் இந்நோயால் உண்டாகும். 

“அல்லது தம்மைவிட வயது குறைந்தவர்கள் இறப்பதைப் பற்றி அறியும்போது ஒருவருக்கு இந்நோய் உண்டாகலாம். இவ்வகை நோய் மனச்சோர்வுடன் சேர்ந்தும் வரலாம். “இதனால் முதியவர்களில் பலர் மரணத்தை நாடுவதும் உண்டு. 

“இந்த நோயை அடிப்படையாகக்கொண்டு ‘ஃபாரா’ குறும்படத்தில் சில காட்சிகள் அமைந்துள்ளன,” என்றார்  பவித்திரன்.  நோன்புப் பெருநாளை மையமாகக்கொண்டு பண்டிகைக் காலத்தில் குடும்பம் எதிர்நோக்கும் சவால்களைத் திறம்படப் படம்பிடித்துக் காட்ட முயன்றுள்ளார் பவித்திரன். அத்துடன் படம் தத்ரூபமாகவும் தனித்துவம் வாய்ந்ததாகவும் அமைய, பிரதான கதாபாத்திரத்திற்காக ஒரு புதிய நடிகரைத் தேடிப் பிடித்து நடிக்க வைத்ததாக விளக்கினார் பவித்திரன்.

நோன்புப் பெருநாள் என்னும்போது ‘மன்னிக்கும் தன்மை’ என்ற பண்பு அதைக் கொண்டாடுவோரால் முக்கியமாகக் கருதப்படுகிறது. அந்தப் பண்பின் அடிப்படையில் ஒரு குடும்பத்தில் ஏற்படும் சச்சரவுகளை மறந்து அனைவரும் ஒன்றிணையப் பெருநாள் உதவுகிறது. அத்துடன் விழாக்காலத்தின்போது ஒரு குடும்பம் ஒரே நிறம் கொண்ட ஆடைகளை அணிவது வழக்கம். 

இது அவர்களுக்கு ஒரு வகையான அடையாளமாகவும் அமைந்து ஒற்றுமையை எடுத்துக்காட்டும் ஓர் அம்சம் என்றும் கூறப்பட்டது. இத்தகைய அம்சங்கள் யாவும் ‘ஃபாரா’ குறும்படத்தில் நயம்படக் கூறப்படுகின்றன. கிட்டத்தட்ட 11,000 வெள்ளி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள ‘ஃபாரா’, 18 நிமிடங்களுக்கு நீடிக்கும். 

‘லசெல்’ கலைப்பள்ளி மாணவர் குழுவின் ஓர் இறுதியாண்டு திட்டப் பணியாக இக்குறும்படம் இயக்கம் கண்டது. 

அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் உருவாக்கத்தில்  ‘லாசா’கலைப்பள்ளி மாணவர்கள் உட்பட இரு முழுநேர மலாய் மொழி நடிகர்களும் இணைந்ததாக பவித்திரன் குறிப்பிட்டார். 

மணிரத்னம், ஸ்டீவன் ஸ்பீல்பர்க், டேவிட் ஃபின்ச்சர் ஆகிய பிரபல திரைப்பட இயக்குநர்கள் இத்துறை என்று வரும்போது தனக்கு முன்மாதிரியாக விளங்குவதாகக் கூறினார் இளையர் பவித்திரன். 

சிறு வயதிலிருந்தே குடும்பத்துடன் அதிகத் திரைப்படங்கள் பார்ப்பதால் திரைப்படத் துறை மீது ஆர்வம் ஏற்பட்டதாக இவர் குறிப்பிடுகிறார். 

தேசிய இளையர் திரைப்பட விருது நிகழ்ச்சி, ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. ‘ஃபாரா’ வெற்றி பெற பவித்திரனுக்கு நம் வாழ்த்துகள். 

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்