அருகிவரும் உயிரினங்களுடன் அரிய சந்திப்பு

கடற்படையினர், கடல் ஆய்வாளர்கள் அதிகமாக மேற் கொள்ளும் ‘ஸ்கூபா டைவிங்’ எனும் முக்குளிப்பு நடவடிக்கையை திரு பி.விஷ்ணு பொழுதுபோக்காக மேற்கொள்கிறார். தமது வெளிநாட்டுப் பயணத்தில் பெரும்பாலான நேரத்தை கடலுக்கே அர்ப்பணித்துவிடுகிறார் 28 வயது இளையரான திரு விஷ்ணு.

விலங்குப் பிரியரான அவர் விலங்குகளை நேரடியாகக் கண்டு அவற்றின் வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்வதற்காக குறிப்பிட்ட நாடுகளைத் தேர்ந்தெடுத்துச் சுற்றுலா செல்கிறார். தாம் செல்லவிருக்கும் இடத்தில் கடலின் ஆழம், ஆபத்துகள், அங்கு வாழும் கடல்வாழ் உயிரினங்கள்  போன்றவற்றைப் பற்றி ஆராய்ந்த பிறகே தமது பயணத்தைத் திட்டமிடுகிறார் விஷ்ணு.

பதின்ம வயதிலிருந்து நீச்சல் மீது அதீத ஆர்வம் கொண்ட விஷ்ணு, நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயின்றபோது  உயிர்காப்பு மன்றத்தை இணைப்பாட நடவடிக்கையாகத் தேர்ந்தெடுத்தார். கடலில் சிக்கித் தவிப்போரை சரியான உபகரணங்களைக் கொண்டு  காப்பாற்றும் முறைகள், முதலுதவி, உடனடி உதவி போன்றவற்றில் பயிற்சி எடுத்த விஷ்ணு, ‘ஸ்கூபா டைவிங்’ பயிற்சியைப் பெற்று, பகுதி நேர உயிர்காப்பாளராகப் பணிபுரிந்தார். 

நாளடைவில் 'விண்ட்சர்ஃபிங்', 'வாட்டர்போலோ' போன்ற பல  நீர் விளையாட்டுகளில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. 

அவர் ஆழ்கடலில் வாழும் அரிய உயிரினங்களைக் காண விரும்பினார். நீர்வாழ் உயிரினங்கள் வாழும் ஆழ்கடலை ரசிப்பதற்கும் அருகிவரும் கடல் உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற் படுத்துவதற்கும் நியூசிலாந்து, இந்தோனீசியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்தார் விஷ்ணு. நியூசிலாந்தில் 2015ஆம் ஆண்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் தங்கியிருந்து முக்குளிப்பில் ஈடுபட்டார் அவர்.

கைக்கௌரா கடல் பகுதியில்   நூற்றுக்கணக்கான ஓங்கில்களை மிக நெருக்கத்தில் கண்டு, அவற்றுடன் நீந்தியும் மகிழ்ந்தார் அவர்.

சுறா மீன்களின் குணாதிசயங் கள், அவற்றை நெருங்குவதற்கான அணுகுமுறைகள், அவை அதி கமாக வாழும் கடல் பகுதிகள் போன்ற முக்கிய தகவல்களை தமது ஆராய்ச்சிகளின் மூலம் சேகரித்து, சென்ற ஆண்டு தென் னாப்பிரிக்காவில் உள்ள அலிவால் ஷோலுக்கு அவர் சென்றார்.

சுறா மீன்களை மற்ற முக்கு ளிப்பாளர்கள் எவ்வாறு சென்ற டைகிறார்கள் என்பதைக்  காணொளி யின் வழியாகத் தெரிந்துகொண்டு,  அங்கு தனிநபராகச் சென்று, முக்குளிப்பில் ஈடுபட்டார் விஷ்ணு.

பனிமலை ஏறுதல், ‘பஞ்சி ஜம் பிங்’ போன்ற சாகச விளை யாட்டுகளில் ஈடுபட விருப்பம் தெரிவித்தபோது அவரது  பெற்றோர்கள் சற்று  பதற்றமடைந்தாலும் அவர்களைச் சமாதானப்படுத்தி, அவற்றில் ஈடுபட்டார். 

Property field_caption_text
நியூசிலாந்தில் உள்ள பூங்கா ஒன்றில் அல்பாகா விலங்குகளுக்கு விஷ்ணு உணவளித்து மகிழ்ந்தார்.

பல விலங்குகளையும் அரிய விளையாட்டுகளையும் மனதில் கொண்டு பயணங்களைத் தொடங்குவதாகக் கூறிய விஷ்ணு, சுறா மீன்களு டனான தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“கடல் உயிரினங்களைத் தவறாகக் கையாண்டால் உயிரைக்கூட இழக்கும் அபாயம் உண்டு. ஆழ்கடலில் நிலைத்தன்மை பெறுவதில்  நான் சற்று தடுமாறியபோது முக்குளிப்பாளருக்கான பயிற்சி வகுப்புகளில் கற்றுக்கொண்ட உத்திகள் பயன்பட்டன,” என்று தமது ஆழ்கடல் அனுபவங்களை விவரித்தார் விஷ்ணு. அடர்ந்த காடுகளில் வாழும் ஆபத்தான விலங்குகளையும் பார்க்க விரும்பிய விஷ்ணு,  2018ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் உள்ள குரீகர் தேசிய பூங் காவுக்கு நண்பர்களோடு பயணம் செய்தார். சிறுத்தை, காண்டாமிருகம், குரங்கு போன்ற பல காட்டு மிருகங்களை மிக அருகில் பார்த்தது ஓர் அரிய வாய்ப்பு என்றார் விஷ்ணு.

“இனிவரும் காலங்களில் என் துணைவியாருடன்  சேர்ந்து அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவேன்,” என்ற விஷ்ணு, வரும் செப்டம்பர் மாதம் உலகிலேயே ஆக கனமான மீன் வகைகளில் ஒன்றான ‘மொலா மொலா’ மீனைக் காண பாலி தீவுக்குச் செல்லவிருக்கிறார்.