பழுதுபார்ப்பதில் இன்பம் காணும் திவாகர்

இசையமைப்பாளராக வேண்டும் என்று எண்ணுபவர்கள் மத்தியில் இசையை முறையான கருவிகள் கொண்டு மிகச் சிறந்த முறையில் இசைத்திடவேண்டும் என்ற கனவில் இருந்தார் இளையர் திவாகர்.

சிறு வயதிலிருந்தே கல்விமீது இவருக்கு அதிக ஆர்வம் இல்லை.படிப்பில் கவனம் செலுத்தவேண்டும்  என்று பெற்றோர் ஊக்குவித்தாலும்  இசை மோகத்தில் மூழ்கியிருந்தார் இவர். கப்பலின் பாய்மரம் போன்றவற்றைக் கட்டுபவராக வேலை செய்த அவரின் தந்தை திரு மகாலிங்கம் தம் ஓய்வு நேரத்தில் சேகரித்து வைத்த ஒலிபெருக்கிகளைப் பழுது பார்த்து பாடல்களை ஒலிக்கச் செய்வார்.

தந்தை ஒரு பொழுதுபோக்காகச் செய்ததை மகன் முழுநேரப் பணியாக்கிக்கொள்ள விரும்பினார்.

அதை மனதில் வைத்துக்கொண்டு உயர்நிலைப்பள்ளியில் இணைப்பாட நடவடிக்கையாக தகவல் தொடர்பு மன்றத்தில் ஓர் உறுப்பினராகச் சேர்ந்தார். அதன்மூலம்    பள்ளியில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளுக்குத் தகுந்த இசையைச் சரியாக ஒலிபரப்பக் கற்றுக்கொண்டார்.

இணைப்பாட நடவடிக்கையில் கற்றுக்கொண்ட திறனை மேம்படுத்திக்கொள்ள, திவாகர் தொழில்நுட்பக் கல்விக் கழக கல்லூரியில் (மேற்கு) அதன் தொடர்பான பாடத்தைப் பயின்றார்.

அதையடுத்து பலதுறைத் தொழிற்கல்லூரியில் அவர் சேர எண்ணினார். ஆனால் அது நிறைவேறாமல் போனது. இருப்பினும் திவாகர் மனம் தளரவில்லை.

ஒரு கதவு மூடினால் இன்னொன்று திறக்கும் என்பது திவா கரின் வாழ்க்கையில் உண்மையானது. பள்ளியின் முன்னாள் மாணவர்களிடம் ஆலோசனை கேட்டபின் மத்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் உயர் ‘நைடெக் பர்ஃபோர்மன்ஸ்  புரோடக்‌ஷன்’ படிப்பை திவாகர் மேற்கொண்டார்.

நேரடியாக ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை முறையாக நிர்வகிக்கும் திறன்களை வளர்த்துக்கொண்டு பல்லூடகம், மேடைக்குப் பின்னால் தயாரிப்பு வேலைகள் போன்ற உத்திகளை இந்தப் பாடத்தின் மூலம் அவர் கற்றுக்கொண்டார்.

அடுத்த ஈராண்டுகளில் படிப்புடன் நிறுத்திக்கொள்ளாமல் பள்ளியில் இயங்கி வந்த ஒலி, ஒளி தயாரிப்பு நிர்வாக மன்றத்திலும் காலடி எடுத்து வைத்துச் சாதித்தார். ஒரு படி மேலாக அதன் தலைவர் பொறுப்புக்கும் அவர் உயர்ந்தார். ஒலி, ஒளித் துறைக்குத் தேவைப்படும் கல்வித் தகுதியையும் திறனையும் படிப்படியாக வளர்த்துக்கொண்டார் திவாகர்.

ஒவ்வொரு தொழில்நுட்பக் கல்விக் கழகத்திலும் தலைசிறந்த மாணவர்களை அங்கீகரிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட ‘நீ ஆன் கொங்சி’ தங்கப் பதக்க விருது சென்ற மாதம் இவருக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் ஓங் யி காங் இடமிருந்து திவாகருக்கு விருது கிடைத்தது பேரானந்தத்தையும் பெருமையையும் தந்தது. இசை, மேடை, கலை ஆகிய துறைகளில் அதிக ஈடுபாட்டுடன் இருக்கும் 21 வயது திவாகர், மத்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் இவ்வாண்டின் சிறந்த 11 மாணவர்களில் ஒருவராவார்.

“கல்வி மீது  எனக்கு அவ்வளவு நாட்டம் இருந்ததில்லை. ஆனால் நான் எனது இணைப்பாட நடவடிக்கையில் இருந்தபோது மற்றவர்களுடன் நன்குப் பழகி உரையாடுவதற்கு நான் கற்றுக்கொண்டேன். அதனால் நான் எதையும் பரந்த கண்ணோட்டத்துடன் பார்க்கத் தொடங்கினேன். அதுவே எனது கல்வியில் நான் சிறப்பாகச் செய்ய உதவியது,” என்றார் திவாகர். 

ஆசிரியர்களின் உதவியுடன் கல்வியில் மெல்ல மெல்ல முன் னேறி இன்று தம்முடைய நண்பர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்வது தமக்குப் பெருமையாக உள்ளதென்றும் இந்த இளையர் பகிர்ந்துகொண்டார்.