நாட்டைக் காக்கும் பணியில் இளம் வீராங்கனை

சிறு வயதிலிருந்தே யாரிடமும் அதிகம் பேசிப் பழகுவதற்குத் தயங்கும் கூச்ச சுபாவம் உள்ள குமாரி தனேஸ்வரி மனோஹரன் தற்போது சிங்கப்பூர் ஆயுதப்படையில் மூன்றாம்  சார்ஜண்ட்டாக பொறுப்பேற்றுள்ளார்.

சிங்கப்பூர் ஆயுதப் படையின் நிபுணத்துவ பயிற்சி அதிகாரிப் பள்ளி நடத்திய 40/19 நிபுணத்துவ படைவீரர் பயிற்சியின் நிறைவு அணிவகுப்பு இம்மாதம் 22ஆம் தேதி பாசிர் லாபா முகாமில் நடைபெற்றது. 

அந்த அணிவகுப்பைப் பார்வையிடும் அதிகாரியாக வெளியுறவு, வர்த்தக, தொழில் அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளரான டாக்டர் டான் வு மெங் வருகை தந்திருந்தார்.

22 வார நிபுணத்துவ படைவீரர் பயிற்சியின் இறுதியில் தலைமைத்துவம், உடல்வலிமை, மனவலிமை ஆகியவற்றின் அடிப்படையில் மூன்றாம் சார்ஜண்ட் பதவியை ஏற்ற குமாரி தனேஸ்வரி, சிறு வயதிலிருந்தே அதிக நாட்டுப்பற்று கொண்டவர்.

அந்த வகையில், உயர்நிலைப் பள்ளியில் பயின்றபோது தேசிய மாணவர் போலிஸ் படையை தமது இணைப்பாட நடவடிக்கையாகத் தேர்ந்தெடுத்தார் தனேஸ்வரி.

அதில் ஏற்பாடு செய்யப்பட்ட முகாம்கள், அணிவகுப்புகள், உடல் வலிமையைச் சோதிக்கும் கடுமையான பயிற்சிகள் ஆகியவற்றின் மூலம் நாட்டைக் காப்பதற்கான அடிப்படைத் தேவைகளை அவர் புரிந்துகொண்டார்.

சிறிய நாடாக இருந்தாலும் குறைந்த காலகட்டத்தில் மிகுந்த வளர்ச்சியை அடைந்த சிங்கப்பூருக்கு சேவையாற்ற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் தனேஸ்வரி இருந்தார். 

சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மின்னியல், மின்னணுவியல் பொறியியல் துறையில் பயின்று கணினி செயல்நிரலாக்கத்தின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.

தமது குறிக்கோளை நோக்கிய பயணத்தில் உடலை கட்டுக்கோப்பாக வைத்துகொள்ள கடல்நாகப் படகு இணைப்பாட நடவடிக்கையில் சேர்ந்தார் அவர்.

மூன்று ஆண்டுகால கல்விக்குப் பின்பு ராணுவத்தில் முழு நேரப் பணியில் சேர்ந்தார் தனேஸ்வரி.  அதையடுத்து, ஒன்பது வார அடிப்படை ராணுவப் பயிற்சி பெற்ற தனேஸ்வரி, அங்கு மேற்கொண்ட பயிற்சிகள் தமது வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தன என்றார்.

நீண்டதூரப் பயணத்திற்காக தயார்ப்படுத்துதல், 2.4 கிலோ மீட்டர் ஓட்டம் போன்ற பயிற்சிகளைப் பெற்றதுடன் ராணுவத் துறைக்கு தேவைப்படும்  திறன்களை வளர்த்துக்கொள்ளவும் இப்பயிற்சி கைகொடுத்ததாக தனேஸ்வரி குறிப்பிட்டார்.

அதன் பிறகு, நிபுணத்துவப் பயிற்சி அதிகாரிப் பள்ளியில் பயிற்சி பெற்றார் தனேஸ்வரி.  இரு பாலினருக்கும் பொதுவான அந்தப் பயிற்சி சவால்மிக்கதாக இருந்ததாகச் சொன்ன அவர், அதனை வெற்றிகரமாக முடிக்க மிகுந்த துணிச்சல் தேவைப்பட்டது என்றார்.  

‘‘நான் மேற்கொண்ட பயிற்சிகளில் பல நிலைகள் இருந்தன. உடல்வலிமையையும் மனவலிமையையும் சோதிக்கும் பயிற்சிகளுடன் ராணுவத்துறையைப் பற்றிய தகவல்களையும் தெரிந்துகொண்டேன். 

‘‘இளம் வயதிலேயே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வந்ததால் உடற்பயிற்சிகளில் கடுமையான சவால்களைச் சந்திக்கவில்லை. 

‘‘என்னை ஒரு பெண் என்று நினைத்து ஒதுக்காமல் அங்கு   நடத்தப்பட்ட பயிற்சிகளில்  நான் முன்னேற்றம் அடைய, அங்கு பயிற்சி பெற்ற ஆண்கள் ஊக்குவித்தனர்.

“இந்தப் பயிற்சிகளில் பங்கேற்றவர்கள் கடந்து வந்த  பாதை, அவர்களது அனுபவங்கள் ஆகியவற்றைப் பற்றி  அறிந்துகொள்ள முடிந்தது.

“இளையர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவ முடிந்தது,” என்றார் 23 வயது தனேஸ்வரி. 

சமிக்ஞை கருவி நிபுணராகவும் பதவியேற்றுள்ள  தனேஸ்வரி தமது பெற்றோரின் ஆதரவுடன் இத்துறையில் மேலும் முன்னேறி வருகின்றார். 

தற்போது, அடிப்படை போர் படைவீரர்களுக்கான மூன்று மாத கால பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் தனேஸ்வரி.